அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
23.09.2024
39. மனந்திரும்புதலோடு, உறுதியான தீர்மானம் வேண்டும்!
தேவனோடு வைத்திருக்க விரும்பும் உறவு அனைத்தும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு இயந்திர-காலத்து நடைமுறையாய் மாறிவிட்டது! ஏதோ ஒரு அதிகாரத்தைப் புரட்டி படிக்க வேண்டும். பின்பு கண்ணை மூடி ஒரு சிறு ஜெபத்தை ஜெபித்துவிட்டு, தன் அலுவலுக்குத் துரிதமாய் ஓடிவிட வேண்டும்! இவன் எப்படி முழு கிறிஸ்தவனாய் மாறமுடியும்?
தனக்குள் வெற்றுகூடுதான் இருக்கிறதென்பது, அவனுக்கே தெரியும்! ஆகிலும், அதை மூடி மறைப்பதற்காக ஒரு ஆவிக்குரிய கூட்டத்திற்கு செல்லுவான்... அதன்பின்பு, மற்றொரு கிறிஸ்தவ விசேஷ கூட்டத்திற்கும் செல்லுவான். தன் ஆவிக்குரிய பொக்குத் தன்மையை மறைக்க ‘பிரசங்கம் செய்யப்’ போகிறவர்களும் உண்டு!? அதுபோன்ற, ஆவிக்குரிய பரிதாபமான நிலையே நம்மைச்சூழ, எங்கும் காணப்படுகிறது. இப்படியொரு காலத்தில் சிக்கியிருக்கும் மாந்தர்களில் நீங்களுமுண்டே? நீங்கள் தேவனுடைய வழிக்கு மீண்டும் திரும்ப வேண்டுமென்றால், ஆழமான மனந்திரும்புதல் மாத்திரமல்ல... உறுதியான தீர்மானம் எடுத்து ‘உறுதி கொண்ட’ ஒரு நல்ல இருதயமும் உங்களுக்கு வேண்டும்!
- ரத்னம்