அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

06.10.2025
40. தியாகம் ஒன்றே “உயர்வு - தாழ்வு” பார்ப்பதில்லை!
இமாலய மலையில், கொடிய வயிற்று வலியில் சுருண்டு சாகக் கிடந்த ஒரு மனுஷனை, சாதுவோடு அமர்ந்து உபதேசம் கேட்ட ஒரு பையன், அவரைத் தன் முதுகில் போட்டுக்கொண்டு சுமார் 2 மைல் அந்த மலையின் கரடுமுரடான பாதையில் நடந்துவந்து, அவர் உயிரை காப்பாற்றினான். தொற்று நோயில், அழுகி இருந்த அந்த மனிதனை உயர்குல வாலிபன் தூக்கிவந்த செயலுக்கு ‘ஒரே காரணம்’ சாது அவர்களோடு சேர்ந்து பெற்றுக்கொண்ட இயேசுவின் தியாக ஆவியே ஆகும். அவன் தூக்கி வந்த செயலைவிட, அவனிடமிருந்து ஒளி வீசிய அன்பின் சுடரே அன்று எல்லோர் மனதையும் பரவசப்படுத்தியது!
சாதுவை சூழ்ந்திருந்த மக்களில், ‘குறிப்பாய்’ வாலிபர்களின் உள்ளத்தை மாற்றிய மகிமை சொல்லி முடியாதது!
சாது சுந்தர் சிங்கின் வாழ்க்கையோ முற்றிலும் அனல் கொண்ட தியாகச் சுடராய் இருந்தது. அவர் தனக்காக வாழ்ந்தார் எனச் சொல்வதற்கு, துருவி துருவி பார்த்தாலும், யாதொரு தடயமும் யாதொருவராலும் காண முடியவில்லை!
- ரத்னம்
