அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
30.09.2024
40. ஜீவனைப் பார்க்கிலும் கிருபையே நல்லது!
“ஜீவனைப் பார்க்கிலும்” உமது கிருபை நல்லது! என விளம்பும் சங்கீதம்63:3 எத்தனை உற்சாகமாயுள்ளது! இந்த உலக ஜீவியத்தின் லாபமோ, நஷ்டமோ அல்லது துன்பமோ இன்பமோ..... ஆகிய அனைத்தையும் பார்க்கிலும் அவரது கிருபையே மிகவும் நல்லது. இந்த உலகத்தில் நாம் கொண்ட ஜீவியம் “வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலம்!” என்ற உண்மையை அறிந்துணர்ந்த தாவீது, “என் ஆத்துமா உம்மீதே தாகமா யிருக்கிறது!” என தன் ஜீவியத்தின் அனைத்து இன்ப - துன்ப கிரியைகளைப் பின்னால் வைத்து “அதிகாலமே தேவனைத் தேடி..... அவர் மீதே தாகம் கொண்டார்!” (சங்.63:1). இதற்கு பதிலாக, காலமே தொடங்கி இந்த உலக ஜீவியமே பெரிதென ஓட தொடங்குபவன், கானல் நீருக்காக ஓடி, யாதொன்றினாலும் தாகம் தீர்க்கப்படான்!
தாவீதோ, ‘அதிகாலமே’ தேவனைத் தேடி, ‘தாகம்’ தீர்ந்த அவரது அறிக்கையே “ஜீவனைப் பார்க்கிலும், அல்லது ‘இந்நாளுக் குரிய எந்த நிகழ்வைக் காட்டிலும்’ உமது கிருபை நல்லது” என்ற துதியின் முழக்கமாய் இருந்தது!
- ரத்னம்