அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
குஷ்டரோகத்திலிருந்து சுகம்பெற்ற “பரிசேயனாகிய சீமோன்” ஓர் ஸ்தோத்திரக் கூட்டம் நடத்தி இயேசுவிற்கு விருந்து கொடுத்த சமயத்தில், ஒரு பாவியாகிய ஸ்திரீ “விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை” இயேசுவின் சிரசில் ஊற்றினாள் (மத்.26:7). அதை இயேசுபெருமான் மெச்சிக் கொண்டு “சீமோனே, நான் உனக்கு ஒரு காரியம் சொல்ல வேண்டும்” (லூக்.7:40) என ஓர் செய்தியை முன் வைத்தார்! ஆம், “உன் ஸ்தோத்திரம் வேறு” “இவள் ஸ்தோத்திரம் வேறு” என்றே சொல்லி விட்டார்! “கர்த்தர் சுகம் கொடுத்தார், உபகாரம் செய்தார்... ஸ்தோத்திரம்!” என்பதில் ‘நளதம்’ இருந்தாலும், அது ஒன்றும் தேவன் மெச்சிக்கொள்ளும் “விலையேறப் பெற்ற நளதம்” இல்லை! என்று இயேசு அவனுக்கு விளக்கினார்:
‘உபகாரங்களுக்கு’ ‘சுகத்திற்கு’ ஸ்தோத்திரம் செய்த இவர்கள், துன்பத்தில் ‘நொறுங்குண்டு’ ஸ்தோத்திரம் செய்ததில்லை! அந்த பாவியாகிய ஸ்திரீயோ, மிகுதியான கண்ணீரின் மத்தியில் சேகரித்த “அந்த” விலையேறப்பெற்ற நளதம்.... இயேசுவின் பாதத்தை அவள் கண்டு, அவரைத் தொழுதுகொள்ளச் செய்து விட்டது! ஆம், அவள் இயேசுவை தரிசித்து, தன் சிரம் தாழ்த்தி, கண்ணீர் ததும்ப முத்தமிட்டு ஆராதனை செய்தாள்! (லூக்.7:40).