அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

18.05.2026 துளிகள் - 20
பெலவீனத்தை உணரும் ‘கொடி’ செடியை சார்ந்து பலன் தரும்!
தனது ஒன்றுமில்லாமையை ‘உள்ளபடி உணராத’ அனேக விசுவாசிகளே இன்று கிறிஸ்துவுக்குள் நிலைத்து வாழவில்லை! “ஒருவன் தான் ஒன்றுமில்லாதிருந்தும் தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால் தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்” (கலா.6:3). மேலும், “எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல் ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியுள்ளவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” (2கொரி.3:5) ஆகிய இந்த 2- வசனங்களே நிலைத்திருக்கும் கிறிஸ்தவனின் இரகசியம்! எல்லாரைப் பார்க்கிலும் அதிகமாய் பிரயாசப்பட்ட அப்போஸ்தலன் தம்மைக் குறித்துச் சொல்லக்கூடியது இவ்வளவுதான்! தான் ஒன்றுமில்லாத கொடியென்றும், கிறிஸ்துவாகிய செடியில் அவர் நிலைத்திருந்தால் மாத்திரமே, உன்னதமான ஜீவியமும், கனிகள் நிறைந்த உத்தம ஊழியமும் தன்னில் காணப்பட முடியும் என, அனுபவ சாட்சியாகக் கூறுகிறார். பெலவீனமான கொடி அதிக பலன் தரும் ஜீவிய இரகசியம் அதுதான்!
- ரத்னம்
