அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

03.11.2025
44. “சிலுவை” கொண்டு தந்த, மாபெரும் விடுதலையின் நற்செய்தி!
மாம்சத்தின்படி நாம் ஒவ்வொருவரும்.... முழுவதுமாய் கறைபட்ட, சரி செய்யப்படக் கூடாத, உதவாக்கரைகள்! நன்மை செய்ய எவ்வளவு முயலுகின்றோமோ அவ்வளவு அதிகமாய் தோல்வியையே தழுவி நிற்போம். முழுக்க முழுக்க கறைப்பட்ட இந்த உதவாக்கரை மனிதனை வைத்துக் கொண்டு நாம் என்னதான் செய்வதோ? இவ்வாறு உணர்வுற்று அங்கலாய்த்து நிற்கும் இந்த வேளையில்தான்..... “நாம் கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலறையப்பட்டோம்” என்பதைக் காணும்படி தேவன் நம் கண்களைத் திறக்கிறார்! (கலாத்தியர் 2:20).
ஆம், நம் “கடன் பத்திரம்” மாத்திரமல்ல, கடன்பட்ட அந்த கடனாளியே சிலுவையிலறையப்பட்டு விட்டான்! கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளில் இவை அனைத்துமே அடங்கியிருக்கிறது. பிதாவானவர் அப்படியிருக்கும்படிச் செய்தார்... அது அப்படியே ஆயிற்று! அதுவே நமது விடுதலையின் நற்செய்தி!
- ரத்னம்
