அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

10.03.2025
10. ‘ஜெபத்தை’ எழுதுவோர் பேசுவோர் உண்டு! ஜெபத்தின் ‘போர்முனை’ நிற்பவர் சிலரே!
நாம் ‘இரத்தம் சிந்தும் அளவிற்கு’ ஜெப வாழ்வில் போராடவில்லை. மார்ட்டின் லூத்தர் உரைத்ததுபோல் ‘நம்முடைய ஆத்துமாவில் வியர்வை கூட காணப்படவில்லை!’ இன்றுள்ள ஜெப ஜீவியம் “ஜெபித்தாலும் சரி, ஜெபிக்காவிட்டாலும் சரிதான்” என்ற மனப்பான்மையே உலாவுகிறது. ஜெபத்தில் பதில் கிடைத்தால் நல்லதுதானே.... என்ற உறுதியற்ற ஜெபமே, கிறிஸ்தவர்களை ஆட்கொண்டுவிட்டது. ‘கிரயம் செலுத்தாமலே’ ஜெபத்திற்கு முழங்கால்படியிட முயற்சிக்கிறார்கள்! ஜெபத்திற்கு ‘பலமான விருப்பமும்’ இல்லாமல்போய்விட்டது. ஜெபத்திற்கு ஆயத்தமான தகுதியோ, அசதியில்லாத உற்சாகமோ, இடைவிடாத ஜெப ஆவியோ.... இல்லாமல், நாம் ஜெபிக்கச் செல்வது கொடுமை!
ஜெபம் ஒன்றிற்கு மாத்திரமே, தனது வல்லமையை தேவன் கரம் விரித்து வழங்குகிறார். ஜெபத்தின் வல்லமையை எழுதிக்காட்டுவோர் அநேகர். ஆனால், ஜெபத்தில் நின்று போராடியவர்கள் வெகுசிலர்!
- ரத்னம்
