அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
20.05.2024
21. உங்களின் ‘துதிபாடல்’ துன்பத்தில் நிறுத்துவது, நியாயமல்ல!
தேவனோடு இசைந்து வாழ்ந்த புனித சகோதரி எபன் அவர்கள், தான் கண்ட ஓர் இயற்கை காட்சியை அழகுபட விவரித்தார்கள்: “அன்று பெரும் மழை பெய்தது! நான் கதவைத் திறந்து பார்த்தபோது, ஓர் அழகிய ராபீன் குருவி மழையில் நனைந்து கொண்டே இனிய பாடல் ஒன்று பாடியது! அந்த குருவி எனக்கு ஒரு முக்கிய பாடத்தை கற்றுக் கொடுத்ததைப்போல் உணர்ந்தேன். ‘மழைத்துளி’ ராபீன் குருவியின் மீது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து விழுந்து கொண்டே இருந்தது. ‘பாவம், இவ்வளவு நனைக்கிறதே’ என நான் ஒரு பக்கம் எண்ணினாலும், ராபீன் குருவியோ தனது பாடலின் இசையை இன்னும் அதிகமாய் தலையை உயர்த்தி பாடிக்கொண்டே இருந்தது. ராபீன் குருவியை உற்று பார்த்துக்கொண்டிருந்த என் உள்ளத்திலோ ஓர் பரவசம் ஏற்பட்டதைக் கண்டேன். என் வாழ்வில் துன்பங்கள் அதிகரித்தவுடன் ‘மகிழ்ச்சியின் பாடல்’ என்னிடம் நின்று போனதை பார்த்திருக்கிறேன்.
ஆனால், துன்பம் வந்தால் என்ன?..... அது அதிக அதிகமாய் கூடிக்கொண்டே போனாலும் என்ன? என்னுடைய மகிழ்ச்சியின் பாடலை நான் நிறுத்திக்கொண்டது நியாயமல்ல என உணர்ந்தேன்!
- ரத்னம்