அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

16.03.2026 துளிகள் - 11
‘பூரண அர்ப்பணத்தில்’ எதுவும் ஒளித்துவைத்திட இயலாது!
கிறிஸ்துவின் அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்த 17-ம் நூற்றாண்டின் பிரெஞ்ச் தேசத்து சகோதரி ஒருவர், தன்னையும், தன் உடமைகள் அனைத்தையும் ‘கர்த்தருக்கே அனைத்தும்’ என அறிக்கை செய்து வாழ்ந்தார்கள்! ஒருமுறை, ஆண்டவர் அவருக்கு “அவர்கள் விரும்பியிருந்த விலையேறப்பெற்ற ஆபரணத்தை” நினைவுபடுத்திய நேரத்தில் ‘உடனே’ அதையும் கர்த்தருக்கு ஒப்புவித்தார்கள். அப்போது அவர்கூறிய அர்ப்பணத்தின் வாசகங்கள் மிகவும் வலிமை மிகுந்த பக்திவிருத்தி அளிப்பதாய் இருந்தது! அது என்னவெனில்: “ஓ கர்த்தாவே, எனக்கு ஒரு இராஜ்ஜியமே சொந்தமாயிருந்தாலும், அதை மனப்பூர்வமாய் உம் பாதத்தில் சமர்ப்பித்திட எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை!” என கூறினார். இவ்வாறு ‘கர்த்தருக்கு கொடுப்பதை’ அன்று அந்த ஜசுவரியவான் போல, அவனது “மிகுந்த ஆஸ்தி” பூரண அர்ப்பணம் செய்வதற்கு தயங்கிப் பின்வாங்க வைத்தது! (மாற்கு-10). அவ்வித கேடான நிலை இல்லாமல், தன்னைக் கொடுத்த ஆண்டவருக்கு, நம் முழுமையும் அர்ப்பணித்து வாழ்ந்திட கர்த்தர் கிருபை செய்வாராக!
- ரத்னம்
