கர்த்தரின் சந்ததியாகிய எம்மைப் பற்றி......
தேவன் என்னை சந்தித்து, என் பாவ ஜீவியத்தை வேரோடு மாற்றி அவரது பிள்ளையாக்கிய 1968 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் என் வாழ்விலே ஓர் புதிய நாள்! அடுத்த ஆண்டிலேயே பரிசுத்தாவியின் அபிஷேகம், தண்ணீர் ஞானஸ்நானம் என, என் கிறிஸ்தவ அஸ்திபார மூல உபதேசங்கள் பெருமகிழ்ச்சியுடன் என்னில் நிறைவேற ஒப்புக்கொடுத்தேன். இரட்சிக்கப்பட்ட அந்த நாள் துவங்கி..... இன்று என் 70-ம் வயது தொடர்ச்சியாய் பல்வேறு விதத்தில் என் இரட்சகரைப் பற்றிய சுவிசேஷத்தை பெருமகிழ்ச்சியுடன் பறைசாற்றி அறிவித்து வருகிறேன்!
ஆசீர்வதிக்கப்பட்ட 1981-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, என் 30-ம் வயது நிறைவில் கர்த்தர் என்னை ‘பெயர் சொல்லி’ முழுநேர ஊழியத்திற்கு அழைத்தார்! 10-ஆண்டுகள் செய்த என் சொந்த ‘ஜவுளி வியாபார’ கடையை விட்டு என் மனைவி, ஒரு வயது பெண் குழந்தையோடு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு முழுநேர ஊழியத்திற்கு கர்த்தரையே சார்ந்துகொண்டு அடியெடுத்து வைத்தேன்! மதுரை கே.புதூரிலுள்ள அன்பு தேவ ஊழியர் ஜோஸப் பாலச்சந்திரன் அவர்களோடு இணைந்து ஊழியம் செய்திட கர்த்தர் என்னை இணைத்தார்! பின்பு டெல்லி நகரத்திலுள்ள நல்ல சமாரியன் ஐக்கியத்தின் அன்பு தலைமை ஊழியர் கிளாடி ஈஸ்வர்ராஜ் அவர்களோடு சுமார் 4-மாத ஊழிய தொடர்பில் வெகுவாய் ஆசீர்வதிக்கப்பட்டு ஊழியம் செய்தேன்! அவரது நடைமுறை சுயத்திற்கு மரிக்கும் சிலுவை பாதையின் சத்திய ஜீவியம், கிறிஸ்துவைப்போன்ற உத்தம ஊழியம் வெகுவாய் என்னை கவர்ந்தது! பின்பற்ற உகந்த மாதிரியாகவும் மாறியது! இந்த தலைசிறந்த தேவ ஊழியர் தன் இளமையான 43-வயதில் தன் எஜமான் கர்த்தரின் மகிமைக்குள் பிரவேசித்தார்.
அடுத்து வந்த முக்கிய ஊழிய மாற்றமே “மதுரை கிறிஸ்தவ ஐக்கிய” சபை ஊழியம்! 1984-ம் ஆண்டு செப்டம்பர் மாத ஆரம்பத்தில், நல்ல சமாரியன் ஐக்கியத்திலிருந்து சுமார் 4-ஆண்டுகளுக்குப்பிறகு வெளிவந்து ஆரம்பித்த 10- என்ஜினியர்ஸ் காலனியில் துவங்கிய சபை ஊழியம்! கிளைகள் கொண்ட ஸ்தாபன ஊழியத்தைவிட, வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் 2-3 அதிகாரங்களில் காணப்படும் “தனித் தனி” குத்துவிளக்கான “ஸ்தல சபை” ஊழியமே தேவசித்தம் என உணர்ந்து “பழுதற்ற தூய காணிக்கையாக” (A Pure Testimony) கிறிஸ்துவின் சரீரமான சபை கட்டப்படுவதற்கு நடத்தப்பட்டு என்னை அர்ப்பணித்தேன்! 1984 செப்டம்பர் 9-ம் தேதி, என் சிறிய குடும்பத்தோடு, கிறிஸ்துதாஸ் என்ற சகோதரனோடு ஞாயிறு கூட்டம் அற்பமான ஆரம்பமாய் துவங்கியது! அன்று முதல் 2022 வரை, 40 ஆண்டுகாலமாய் எந்த மானிட ஆதரவும் தேடாமல், சார்ந்து கொள்ளாமல் சபை ஊழியம் செய்திட கர்த்தர் கிருபை செய்துள்ளார்! கர்த்தர் ஒருவருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!
சபை ஊழியத்தோடு “பரலோக பொக்கிஷங்கள்” மாதாந்திர பத்திரிக்கை கடந்த 39- ஆண்டுகளாய் உத்தமமாய் நடைபெற்று வர கர்த்தர் கிருபை செய்துள்ளார்! வாலிபர் முகாம் ஊழியங்கள், கான்பரன்ஸ் கூட்டங்கள், புத்தக ஊழியங்கள், வலைதள ஊழியங்கள், YouTube ஊழியங்களென உலகளாவிய ஊழிய விஸ்தாரத்தை கர்த்தர் அருளிச் செய்தார்!
2020-ம் ஆண்டின் கொரோனா கொடிய காலத்தைவிட மோசமாய், கிறிஸ்துவின் தூய சரீரமான சபையாய், கர்த்தரால் கட்டப்பட்டு வந்த அவரது சபையின் ஊழியத்தில் ‘சில சபை தலைவர்கள்’ தலையிட்டு, சபையின் துரோகத்திற்கு கைகொடுத்து, மகா துக்கமான பிரிவினை சேதத்தை உண்டாக்கினார்கள்! இப்படி சம்பவித்த செயல், நான் அறிய இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ சபைகளில் வேறு எங்கும் சம்பவித்திருக்குமா? என்றே நான் வியந்தேன்! ஆகிலும், இதுவும் தேவனுடைய அனந்த ஞானம் அடங்கியுள்ளது என்பதை பின்பு நான் கர்த்தரால் உணர்த்துவிக்கப்பட்டேன்! “அவரிடத்தில் அளவில்லாது அன்புகூர்ந்திடும்” எனக்கும், எங்கள் சபைக்கும், சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெற்று வருவதை கண்கூடாக கண்டு வருகிறோம்!
இத்தனையும் செய்து, எங்களைத் தொடர்ந்து ஆண்டு நடத்தும் எம்பெருமான், எங்கள் குருநாதன் இயேசுவிற்கே சகல துதியும் கனமும் என்றும் உண்டாகக்கடவது! ஆமென். கறை திறையற்ற பிழையில்லாத சத்தியத்தின் அக்கினி, என்றும் அவியாது கர்த்தர் வரும்வரை யுகயுகமாய் ஜொலித்து நிற்கும்! அந்த பரிசுத்தத்தின் சத்திய அக்கினி, உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில், இந்த வலைதளத்தின் மூலமாய் பற்றி எரிய வேண்டும் என்பதே எங்கள் வலைதள ஊழிய குழுவினரின் தீராத வாஞ்சையும், ஜெபமுமாய் இருக்கிறது!