அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
விற்கப்பட்ட ‘இரண்டு அடைக்கலான் குருவிகளில்’ ஒன்றாகிலும் பிதாவின் அனுமதியில்லாமல், தரையிலே விழாது! என நம் குரு உரைத்திருக்க.... தன் முழுமையையும் குருவின் பாதம் தத்தம் செய்துவிட்ட உத்தம சீஷன், தன் சரீரத்திற்கு பயப்படுவது நியாயம்தானா? தனக்குண்டான யாவற்றையும் ‘விற்றுப்போட்ட ஒரு சீஷன்’ (மாற்கு 10:21). “அனேகம் அடைக்கலான் குருவிகளைக் காட்டிலும் விசேஷித்தவன்!.... “ஆதலால் பயப்படாதிருங்கள்” என கூறிய இனிய தொனி நம் நெஞ்சம் நிறைப்பதாக!
தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறதே.... கீழே விழுந்த முடியைத்தான் உதறிவிட்டீர்கள்! உங்கள் ஜன்னலருகே வந்து “கீச்.....கீச்” என, வந்து நிற்கும் குருவியை யாவது இனிமேல் துரத்திவிடாதிருங்கள்! அந்தக் ‘குருவியை’ இனிமேலாவது சற்று கவனித்துப்பாருங்கள்!அந்தக் குருவியின் ஆனந்த ‘கீச், கீச்’ ஒலி, உங்களை விசுவாச ஏணியில் ஏந்திச் சென்று, மகிழ்ச்சியின் நிம்மதிப் பொன்னூஞ்சலில் அமரச் செய்துவிடும்!