அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“ஒருவனையும் தூஷியாமல்” என்ற தீத்து 3:2 வசனத்தை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் எவ்வளவு சீக்கிரத்தில் பிறரைக் குறித்து தீமையாய் அவரது முதுகுக்குப் பின்னால் பேசிவிடுகிறோம்! ‘புறங்கூறுதல்’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் BACK BITE என்றே கூறப்படுகிறது. அதாவது, ஒருவரின் முதுகுக்குப் பின்னால் சென்று அவரைக் கடித்துக் குதறுவதே அதன் பொருளாகும்! ஒருவன் தவறு செய்யும்போது அவனைத் தனியே சந்தித்து “நேருக்கு நேராய்” நின்று அவன் தவறை உணர்த்தும்படியே இயேசு கட்டளையிட்டார் (மத்.18:15). அப்படிச் செய்வது பாவமல்ல.... ஏனென்றால், உண்மை சிநேகிதன் மாத்திரமே, இவ்வாறு நேருக்கு நேராய் நின்று தவறுகளை உணர்த்துவான். ஆனால் அவர் முதுகுக்குப் பின்னால் ‘அதே காரியத்தை’ நீங்கள் மற்றவரிடம் பேசுவது ‘கொடிய செயல்’ என்பதை அறியக்கடவோம். அக்காலத்தில், போர் களத்தில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வீரனை எதிராளியானவன் முதுகுக்குப் பின்னால் குத்தினால், அவ்வாறு குத்தியவன் “கோழை” என அழைக்கப்படுவது மரபு! இன்றும், சபையில் இவ்வித ஆவிக்குரிய கோழைகள் அநேகர் இருப்பது கொடுமையன்றோ!!