அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

16.06.2025
24. வெளியிலுள்ள ஓசை எதுவும் ‘உள்ளே நொறுங்கியவனை’ பாதிக்காது!
இன்று அநேகர் தங்களைச் சுற்றிலும் ‘பாத்திர ஓசைகள்’ போன்ற தொந்தரவிலிருந்து விடுபட்டால்தான், தேவ பிரசன்னத்தைப் பெற்றிட முடியும் என எண்ணுகிறார்கள்! இது எவ்வளவு பெரிய தவறு!! தொந்தரவு, பாத்திர பண்டங்களிலோ அல்லது மற்ற ஜனத்திடமோ இல்லை.... மாறாக, இவர்களே தான் இவர்களுக்குத் தொந்தரவாயிருக்கிறார்கள்!
பாத்திர பண்டங்களின் ஓசையிலிருந்து தேவன் நம்மை விடுவிக்கப் போவதில்லை. ஆனால், இவைகளின் மூலமாய் உண்டாகும் பிரதிபலிப்புகளிலிருந்து, அவர் நம்மை நிச்சயம் விடுவிக்க முடியும்!
நம்மைச் சுற்றிலும், வெளியே உள்ள சத்தம் எவ்வளவு இருந்தாலும் நாம் நொறுக்கப்பட்டுவிட்டால், நமக்குள்ளிருந்து மாறுபாடான பிரதிபலிப்பு எதுவும் தோன்றாது. நம்முடைய வெளிப்புற கடின ஓடு ஆண்டவரால் உடைக்கப்பட்டபடியால், எந்த சத்தத்தையும் கேட்காதவர்கள் போலவே நம்முடைய பிரதிபலிப்பு இருக்கும்.
- ரத்னம்
