அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
பெருமைக்கு இதுதான் அளவு என்று இல்லை! அது அத்தனை விஸ்தாரமானது! பெருமை எப்போதுமே, தன் பெருமைக்கு காரணமா யிருப்பதில் “சுய மதிப்பு” கொண்டிருக்கும். தன் பணம், செல்வாக்கு, அந்தஸ்து, ஆஸ்தி, சரீர அழகு, சுபாவமான சில நற்குணங்கள், தான் பெற்ற வெற்றிகள், தாலந்துகள்..... ஆகிய அவனுக்குரிய யாவற்றிலும் “சுய மதிப்பு” கொண்டவனாய் “அதில்” பெருமை கொண்டிருப்பான்! இவர்களைத் தேவனே எதிர்த்து நிற்கையில் “தேவனில்லாத” இடத்திற்கே அவர்கள் நகர்ந்து செல்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
“மனத்தாழ்மை” என்பது இருதயத்திற்கு சம்பந்தம் உள்ளதேயாகும்! ஆகவே, ஒருவன் எளியவனோ, வலியவனோ என்பதை வைத்து அல்ல, அவன் இருதயம் தாழ்மையுள்ளதுதானா? என்ற கேள்வியை முன்வைத்து பகுத்தறிந்தே, அவர்களோடு ஐக்கியம் கொண்டிட வேண்டும்!
தாழ்மையுள்ளவர்களின் ஐக்கியம் கொண்ட ஒரு சபையில், தேவ பிரசன்னம் நிறைந்திருக்கும்..... தேவ கிருபையின் ஐசுவரியம் செழித்திருக்கும்! அந்த சபையை பாதாளத்தின் வாசல்களும் மேற்கொண்டிட முடியாது!!