அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
எங்கெல்லாம் மனுஷருடைய கிரியைகள் வேர் கொண்டதோ அங்கெல்லாம் குழப்பமும் நிம்மதியின்மையும் துலாம்பரமாயிருக்கும்! அவர்களின் சொந்த கிரியைகள் “அவர்களே வடிவமைத்த விக்கிரகங்கள்” (Their own molded images) என, ஏசாயா 41:29-ம் வசனம் குறிப்பிட்டு, அந்த கிரியைகள் அனைத்தும் விருதாவும், புயல்காற்று உள்ளடக்கிய குழப்பமே என எச்சரிக்கிறது. “இதோ, அவர்களின்..... சொந்தமான விக்கிரகங்கள்...” என துயரத்துடன் குறிப்பிட்ட 29-ம் வசனத்திற்கு நேர்மாறாக, அடுத்த வசனமோ “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன் (அடிமை!)....” என தேவன் மகிழ்வுடன் கூறும் ஏசாயா 42:1-ம் வசனத்தைப் பாருங்கள்! ‘வியாதியை’ குறிப்பிடும் வேத வாக்கியம், அதை ‘சுகமாக்கும்’ மருந்தையும் குறிப்பிடுகிறது! ஒன்று நிலையற்ற மனுஷீக கிரியைகள்! மற்றொன்று நிலைத்து நிற்கும் சர்வவல்லவரின் சித்தத்திற்கு உட்பட்ட கிரியைகள்!
உண்மைதான், சர்வ வல்லவர் தனது தாசனை (இயேசுவை) ஆதரித்து தாங்கியதற்கு ஒரே காரணம், தேவனுக்கு அவர் தாசனாய் அல்லது அடிமையாய் இருந்ததே காரணம்! ஆம், அவர் தானாக யாதொன்றையும் செய்யாமல், தன் பரம பிதாவாகிய எஜமான் கட்டளையிட்டவைகளை செய்திட்ட தாசன்! தேவனுடைய சித்தம் முழுவதையும் நிறைவேற்றி முடிக்கும்படி தமது தாசனாகிய இயேசுவின்மீது ‘தமது ஆவியை அமரச் செய்து’... ஆதரித்து “இவரே என் தாசன்! என்றும், எனது நேசன் என்றும்” கூறி அகமகிழ்ந்தார் (மத்தேயு 12:18).