அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
முற்றிலும் தாறுமாறான துன்பத்தில், நம்பிக்கையோடு நிலைத்திருப்பதே விசுவாசம்! நூறு வயதான ஆபிரகாம், தன் சரீரம் செத்துப்போன நிலையில், அவன் ஜாதிகளின் தகப்பனாவான் என தேவனால் உரைக்கப்பட்டபோது “நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், நம்பி விசுவாசித்தான்” என ரோமர் 4:18-ம் வசனம் கூறுவதைப் பாருங்கள்! அவன் தேவனால் அழைக்கப்பட்டபோது “தான் போகும் இடம் இன்னதென்று அறியாமலே” புறப்பட்டுப்போனான் என எபிரெயர் 11:8-ம் வசனம் கூறுவதைப் பாருங்கள்! ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும், என சொல்லப்பட்ட பின்பும், அவனை தேவனுக்கு பலியாக ஒப்புக்கொடுத்து “மரித்தோரிலிருந்து அவனை எழுப்ப தேவன் வல்லவர்” என உரைத்த ஆபிரகாமின் கெம்பீரத்தை எபி.11:18-ம் வசனம் கூறுவதையும் பாருங்கள்! எல்லாவற்றிற்கும் மேலாய் “அவமானத்தை எண்ணாமல், பாவிகளின் விபரீதங்களை சகித்து” சிலுவை மரணம் ஜெயித்து ‘தேவ சிங்காசனம்’ அமர்ந்த நமதாண்டவர் இயேசுவை மகிழ்வுடன் கூறும் எபிரெயர் 12:2,3 வசனங்களையும் பாருங்கள்! இனிமுதல், நமக்கு நியமித்திருக்கும் விசுவாச ஓட்டத்தில், இயேசுவை நோக்கிப்பார்த்து தளராத பொறுமையோடு ஓடக்கடவோம்!