அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

14.07.2025
28. ஆவியில் நிறைந்தவன் “துன்பத்தில் துதி” செலுத்துவான்!
மூன்று வாலிபர்கள்.... சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ! இவர்கள் முன் இருந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?.... கொடிய “எரிந்து கொண்டிருக்கும் அக்கினி சூளை” அந்த அக்கினிச் சூளை, வேறு யாருக்கும் அல்ல ‘இவர்களைத் தூக்கி போடுவதற்கே’ எரிந்து கொண்டிருக்கும் அக்கினி சூளை! ஆகிலும் இந்த எபிரெய வாலிபர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அது அக்கினி சூளையைவிட இன்னும் வலிமையான அறிக்கை என்றே கூற வேண்டும். இந்த மூன்று இளைஞர்கள், அந்த எரிதழலை மூட்டிய ராஜாவைப் பார்த்து “நேபுகாத்நேச்சாரே, இந்த காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்” (தானி.3:16,17). பார்த்தீர்களா? நன்றாய் கவனியுங்கள், இந்த காரிருள் நேரத்தில், ஒருவன் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்காவிடில் இத்தனை வலிமையான துதியின் அறிக்கையை கூறவே இயலாது!
- ரத்னம்
