நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

09.07.2026 28வது வாரம்
கொடுத்து வாழுங்கள் ‘தனக்காக குவிப்பது’ பாவம்!

உங்களிடம் அதிக பணம் வந்துவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள்! உடனே, உங்களுக்காகப் பொருட்களை வாங்கி, வாரிக் குவிப்பீர்களோ? அல்லது ‘இவைகளே என் பிற்காலத்தின் தேவை’ என பதுக்கி உங்கள் மனதை அதன் மீது வைப்பீர்களோ?
சரிதான். நீங்கள் இப்போது இப்பொல்லாத உலகப்பொருள் திரட்சியில், சமானிய மானிடர்கள் விழும் குழியில்தான் நீங்களும் விழுந்துவிட்டீர்கள்! அவ்வளவு தான்!!
இதற்கு மாறாக, உங்கள் பணத்தை நியாயமான குடும்ப தேவைகளுக்கும், உத்தம கிறிஸ்தவ ஊழியங்களுக்கும், தேவ நாம மகிமைக்கென்றும் பகிர்ந்தளித்திருக்கலாமே! அது உங்கள் மடியில் திரளான மகிழ்ச்சியையும் ஆதாயத்தையும் கொட்டியிருக்குமல்லவா! ஆம், கருமியாய் இராமல் உங்கள் குடும்பத்திற்கும், உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கும் எவ்வளவு பணத்தை உபயோகிக்கிறீர்களோ, அதுவே உங்களுக்கு நிலையான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கையளித்துவிடும்! “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் அல்லது சந்தோஷம்!” (அப்.20:35) என்று இயேசு கூறியது மெய்யன்றோ!
- ரத்னம்
