நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
23.01.2025
04. பார்வைக்கு அருமையான சபை! கிறிஸ்துவோ சபைக்கு வெளியில்!
மனுஷர் சபைகளை கட்டுகிறார்கள்..... ஆனால், ‘கிறிஸ்துவோ சபைக்குள்’ நுழையவில்லை! வேத புத்தகங்களை அச்சிட்டு குவித்துக் கொண்டார்கள்.... ஆனால், அதை வாசிக்கவில்லை! தேவனைப்பற்றி ஏராளமாய் பிரசங்கிக்கிறார்கள்.... ஆனால், அவரை விசுவாசிப்பதில்லை! கிறிஸ்துவைப் பற்றிய உபதேசங்களை வாரி வழங்குகிறார்கள்.... ஆனால், கிறிஸ்து வழங்கும் விடுதலையும் இரட்சிப்பும் அவர்கள் வாழ்வில் நிஜமாகவில்லை!
தியாக மிஷனெரிகளின், பரிசுத்தர்களின் பாடலை பாடுகிறார்கள், ஆனால்.... அந்த பாட்டோடு மறந்து விடுகிறார்கள்! இந்த கொடிய நிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டாமா?
இன்று எந்த கான்பரன்ஸ் கூட்டத்தை, எந்த சபை நடத்தினாலும் எபேசியர் புத்தகத்தை வைத்துக்கொண்டு வேதபாடம் போதிக்கத் தொடங்குகிறார்கள். நம்மை தேவன் “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடே கூட எழுப்பி உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார்!... இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு!” (எபேசியர் 2:7,8) என வானளாவப் பேசி மக்களை மகிழ்விக்கச் செய்கிறார்கள். அதாவது நமக்குள் எவ்வளவு பாவம் இருந்தாலும், மனுஷீக மூர்க்கங்கள் இருந்தாலும், நம்மை கிறிஸ்துவோடு தேவன் அமரச் செய்துவிட்டார் என்ற போலித்தனம் இன்றைய கிறிஸ்தவத்தை தவறான பாதைக்கு கவர்ந்துவிட்டது!
இவ்வாறு குளிர்ந்து சீர்குலைந்து, கோழையாகிப்போன ஒரு சபையில், இச்சையும், காமவிகாரமும், மூர்க்கமும் நிறைந்த இன்றைய துன்மார்க்க சந்ததி, ஒருபோதும் மனந்திரும்பி வர நாடுவது கடினம்! கர்த்தர் இந்நிலையை மாற்றுவாராக!
- ரத்னம்