நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

02.04.2026 14வது வாரம்
ஊழியம் கொள்ள அல்ல, ஊழியம் செய்வதே பாக்கியம்!

என் தந்தை வெளியூரில் நீண்ட மாதங்களாயிருந்த அலுவல் முடித்து, வீடு திரும்பிய வேளையில் மிகவும் சுகவீனப்பட்டார். ஒரு சில நாட்களில் என்னுடைய தாயாரும் சுகவீனப் பட்டார்கள். வீட்டில் வேலை செய்தவர்கள், தங்கள் நேரம் முடிந்ததும் சென்று விடுவார்கள். மற்ற எல்லா நேரங்களிலும் நானே தனித்து நின்று வயதான என் தந்தையையும், என் தாயையும் மிகுந்த அன்புடன் கவனித்துக் கொண்டேன். அந்த சமயத்தில் இயேசு கிறிஸ்து கூறிய “ஊழியம் கொள்ள அல்ல, ஊழியம் செய்யவே வந்தேன்” என்ற அவரது வார்த்தை எனக்கு உயிரோட்டமாயிருந்தது. வயதான என் தந்தை மிகுந்த பக்தியுள்ளவர். அடிக்கடி வேத வசனத்தை நான் அவருக்கு வாசிக்கும்படி கேட்டுக் கொள்வார். நான் அவைகளை தியான உணர்வோடு வாசிக்கும் போது, என் தந்தை அந்த வசனங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் கேட்பார். இதுபோன்ற நேரத்தில் பக்தர்களின் வாழ்க்கை சரிதை என் நினைவுக்கு வந்தது.
நாம் பிறருக்கு ஊழியம் செய்யும்போது “நிறைவான அன்புடனும் ஸ்தோத்திரத்துடனும் ஊழியம் செய்ய வேண்டும்!” என்ற போதனை, என் வயோதிப பெற்றோர்களுக்கு நான் செய்த பணிவிடைக்கு வெகுவாய் கைகொடுத்தது!
- ரத்னம்
