நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

06.08.2026 32வது வாரம்
உன்னதமே, நம் பெலன்

‘இளைஞர்’ இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்! என ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுவதை வைத்துப்பார்த்தால், சோர்வில்லாத வாழ்விற்கு ‘வயோதிபர்’ என்றே நாம் கருதத் தோன்றும்! ஆனால், அவரோ அப்படிக்கூறாமல் ‘கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள்’ ....சோர்ந்து போக மாட்டார்கள் என்றலல்லவா குறிப்பிடுகிறார்! (ஏசாயா.40:30,31). இங்குதான் அவர் கூறவந்த இரகசியம் இருக்கிறது! ஆம்: சோதனையும், துன்பமும், பாடுகளும் நிறைந்த ஒவ்வொரு நாள் ஜீவியத்திலும், இவர்கள் கர்த்தருடைய சமூகம் சென்று அமர்ந்து, காத்திருந்து.... பாவம் கழுவப்பட்டு, பல்வேறு சூழ்நிலையின் நிமித்தமாய் அவரிடம் ஆறுதல் பெற்று “புதுபெலன்” அடைவார்கள்!
ஆகவே, இவர்களின் ‘புதுபெலன்’ இரகசியம் கேளுங்கள்: எத்துன்ப நேரத்திலும், நாள்தோறும் “கழுகுகளைப்போல் செட்டைகளை அடித்து” உயர உயர எழும்புவார்கள்! அந்த உயர்ந்த ஜெப ஸ்தலத்தில் ‘கர்த்தருக்கு காத்திருந்து’ தங்கள் அன்றாட பெலனைப் பெற்று திரும்புவார்கள்! இவர்களே, எத்துன்பத்தில் ஓடினாலும் இளைப்படையார்கள்! எந்த சூழ்நிலையில் நடந்தாலும் சோர்ந்து போகார்கள்! ஏன் தெரியுமா? “உன்னதமே, அவர்களின் பெலன்!” அல்லேலூயா.
- ரத்னம்
