நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
22.08.2024
34. ‘ஜெபமே’ நாம் தேவனை நெருங்கிச் செல்ல உதவும்!
நாம் ஒருவரோடொருவர் பேசும்போதுதான், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவும் செய்கிறோம். இவ்வாறாகவே, நாம் தேவனிடம் பேசிப்பழகி அவரை நெருங்கி அறிந்து கொள்கிறோம். தீமையிலிருந்து இரட்சிக்கப்படுவதே நம் ஜெபத்தின் பிரதான நோக்கமல்ல! நாம் மிகவும் விரும்பினதை பெற்றுக்கொண்டதும் பிரதானமல்ல! அந்த ஜெபத்தில், நாம் தேவனை அறிந்து கொண்டதே பிரதானமாகும். இதை இயேசு கூறும்போது “ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என தெளிவாக கூறினார் (யோவான் 17:3). ஆம், ஜெபமே நாம் தேவனை அதிகமாய் கண்டுபிடிக்க உதவுகிறது. அதுவே, நம் ஆத்துமாவின் விலையுயர்ந்த கண்டுபிடிப்பாய் இருக்கிறது! யோபுவின் மிகப்பெரிய அங்கலாய்ப்பாய் இருந்ததெல்லாம் “நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்போது நான் அவர் ஆசனத்திற்கு முன்பாக வந்து சேர்வேன்” என்ற வாஞ்சையேயாகும் (யோபு 23:3). இதுவே நம் யாவருடைய ஜெபத்தின் அங்கலாய்ப்பாய் இருப்பதாக!
- ரத்னம்