நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

21.08.2025
34. சிலர் மாத்திரமே ‘நித்திய ஜீவியத்தின்’ செல்வத்தை கண்டவர்கள்!

பொக்கிஷங்களைக் கண்டவன் மாத்திரமே, அதைக்குறித்த சந்தோஷத்தின் மிகுதியால், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்றுவிட ஆயத்தமாயிருப்பான்! (மத்.13:44). ஆனால், ஒரு இளம் பணக்கார அதிபதியோ “இயேசுவைப்போலவே வாழ்ந்திடும் ‘நித்திய ஜீவனும்’ வேண்டும்! தான் வைத்திருந்த உலக ஐசுவரியமும் வேண்டும்!” என வேண்டி நின்றான். அந்த பணக்கார அதிபதிக்கு, ஜீவனைக் கண்டடையும் இடுக்கமான வாசலின் அகலத்தை.... இன்னமும் குறைத்து ‘ஊசிமுனை-காதின் அளவையே’ முன்வைத்தார் இயேசு! ‘கூனல் முதுகு’ ஒட்டகம் கூட அதில் பிரவேசிக்கலாம்.... ஆனால், உலக ஜசுவரியத்தையும் நாடி, இவ்வித ‘இரண்டு எஜமான்’ மனப்பாங்கு கொண்டவர்களுக்கோ “ஜீவனுக்குள் பிரவேசிப்பது” அரிதினும் மா அரிது! என ஆணித்தரமாய் எதிரொலித்தார் இயேசு! ஆம், இவர்களுக்கு “நித்திய ஜீவன்” சொல்லொண்ணா ஐசுவரியமாய் இன்னமும் மாறவில்லை! தங்களின் உலக ஐசுவரியமே, இவர்களுக்கு ஜீவவிருட்சமாய் தோன்றுகிறது! தன் சிலுவையை எடுத்து, குருவைப் பின்பற்றும் பாக்கியம் இழந்த அந்த வாலிபன், துக்கத்தோடே போய்விட்டான் என்றல்லவோ வேதம் கூறுகிறது! (மாற்கு 10:17-25).
- ரத்னம்
