நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

11.09.2025
37. ‘குளிர்ந்துபோன கிறிஸ்தவனை மாற்ற’ பரத்தின் அக்கினி ஒன்றே, பதில்!

“பூமியிலே அக்கினியைப் போடவந்தேன்... அது ‘இப்போது’ பற்றியெரிய விரும்புகிறேன்! என தனது ஏக்கத்தை தொனித்தார் இயேசு! (லூக்கா 12:49). எப்போதும் தன் நெஞ்சத்தில் பற்றி எரியும் கிளர்ச்சியைப் பெற்றவனே கிறிஸ்தவன்! நேற்று அல்ல.... இன்றும், எப்போதும், அது அவனில் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும்! அந்த அக்கினி ‘புழுவும் சாகாத’ பாவ வேதனையின் நரக அக்கினி அல்ல! அது.....
குருநாதர் இயேசு அருளிய அக்கினி!
அது பாவத்தை சுட்டெரிக்கும் பரிசுத்த அக்கினி!
பகையை பொசுக்கிடும் அன்பின் அக்கினி!
பின்வாங்கும் குளிர்ச்சியை அணைத்திடும் அனலான அக்கினி!
அது, என்றென்றும் அவனுக்குள்
பற்றிஎரியும் நித்திய அக்கினி!!
எரிந்துகொண்டிருக்கும் பலிபீடத்திற்கே உன்னத ஆசீர்வாதம் உண்டு! தன் ஏக சுதனையும் ‘பலிபீடம் வைத்த’ ஆபிரகாமையே ஆண்டவர் அழைத்து, ‘வானத்து நட்சத்திரங்களுக்கு’ ஒப்பான உன்னதத்தின் ஆசீர்வாதங்களால் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் என்றார்! ஆம், பலிபீடம் இல்லையேல், பரத்தின் ஆசீர்வாதமும் இல்லை என்பதை அறிவோமாக!
குளிர்ந்துவிட்ட கிறிஸ்தவம் புறக்கணிப்போமாக! தூர்ந்துவிட்ட பலிபீடம் செப்பனிட்டு... பற்றியெரிவோமாக!!
- ரத்னம்
