நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
06.03.2025
10. ‘அவரது மன ஏக்கத்தை’ சபையில் நிறைவேற்ற துடித்து நிற்போமாக!
நாம் மகிமையில் பிரவேசிக்கும்போது, கிறிஸ்துவின் அளவற்ற அன்பின் பெருக்கத்தையும், கிருபையின் ஐசுவரியத்தையும் கண்டு.... அடடே, இந்த பூமியில் அவரது சபையின் ஊழியனாய் இருந்தபோது, ஆண்டவருக்காக இன்னும் அதிகமாய் உழைத்தோமில்லையே! என்று உணர நேரிடும். ஆகையால், ஆண்டவர் கொடுத்த ஊழியத்தை நாம் சுகத்தோடும் பலத்தோடும் இருக்கும்போதே, உண்மையோடும் ஊக்கத்தோடும் நிறைவேற்றுவோமாக! “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்”என்று சொன்ன பவுலின் வாஞ்சை நம்மையும் ஆண்டுகொள்ளட்டும்!
கர்த்தர் நம்மை அழைக்கும் வேளை வரும்போது: “ஆண்டவரே, பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த வேலையை உமது கிருபையால் செய்து முடித்தேன்! நான் அறியாத ஏது பிழை இருந்தால், என் பிழை பொறுத்தருளும் ஸ்வாமி” என பணிவுடன் கூறி அவரிடம் சேரும் பாக்கியம் பெறுவோமாக! ‘கிறிஸ்து அற்ற’ அல்ல.... கிறிஸ்துவே கிறிஸ்து மார்க்கமாய் நம் சபையில் வாழட்டும்! கிறிஸ்து வரும் வரை ஓங்கி வளரட்டும்!! ஆமென்.
- ரத்னம்