நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
நரக அக்கினியில் ‘புழு’ சாவது இல்லை! ஆனால், லூக்கா 12:49-ம் வசனத்தில், இயேசு போட விரும்பும் அக்கினியோ இந்த பூமியில் வாழும் அவரது மாந்தர்க்கு கிடைத்த சிலாக்கியம் என்றே கூற வேண்டும்! ஏனெனில், அவரது அக்கினி பற்றி எரியும் என்றே இயேசு கூறினார்.
எப்போதும் தன் நெஞ்சத்தில் பற்றி எரியும் கிளர்ச்சியைப் பெற்றவனே கிறிஸ்தவன்! நேற்று அல்ல... இன்றும், எப்போதும், அது அவனில் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும்! குருநாதர் இயேசு அருளும் இந்த அக்கினி, பாவத்தை சுட்டெரிக்கும் பரிசுத்த அக்கினி!... பகையை பொசுக்கிடும் அன்பின் அக்கினி! பின்வாங்கும் குளிர்ச்சியை அணைத்திடும் அனலான அக்கினி! அது, என்றென்றும் அவனுக்குள் பற்றி எரியும் நித்திய அக்கினி!!
எரிந்துகொண்டிருக்கும் பலிபீடத்திற்கே உன்னத ஆசீர்வாதம் உண்டு! தன் ஏகசுதனையும் ‘பலிபீடத்தில் வைத்த’ ஆபிரகாமையே ஆண்டவர் அழைத்து, ‘வானத்து நட்சத்திரங்களுக்கு’ ஒப்பான உன்னதத்தின் ஆசீர்வாதங்களால் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் என்றார்! ஆம், பலிபீடம் இல்லையேல், பரத்தின் ஆசீர்வாதமும் இல்லை என்பதை அறிவோமாக! (எபிரெயர்.13:10).
தகிக்கும் தன் பலிபீடத்தை, அணையாமல் காத்திடும் உத்தம கிறிஸ்தவர்கள் எங்கே? எங்களது சத்தியம் மேன்மை என்பார்... எங்களது சபையே உயர்ந்ததென்பார்... நெருங்கிச் சென்றால், அங்கு அனல் இருப்பதில்லை! அக்கினியும் இருப்பதில்லை! குளிர்ந்துவிட்ட கிறிஸ்தவம் புறக்கணிப் போமாக! தூர்ந்துவிட்ட பலிபீடம் செப்பனிட்டு... பற்றியெரிவோமாக!!