நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

31.07.2025
31. ‘தகப்பனின் அன்பே’ அவரது வீட்டில் அவனை தங்கியிருக்கச் செய்தது!

காணாமல் போன ஒரு ஆட்டை மன்னித்தது மாத்திரமல்ல, நம் நல்ல மேய்ப்பன் “தன் தோளின் மேல், போட்டுக் கொண்டாரே” அதுவே நிரந்தர பாக்கியம்! கெட்ட குமாரனாகிய நான், மனந்திரும்பி எழுந்து என் தகப்பன் வீடு நடந்ததும்.... தூரத்தில் நான் வரும்போதே என் தகப்பன் கண்டு, மனதுருகி, ஓடிவந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் செய்தாரே “அதுவே அந்த பாக்கியம்” (லூக்கா 15:5,20).
வெறும் பாவமன்னிப்பு பெற்றவர்கள் பலர்.... ஆனால், அவரின் பாதத்தை நன்றியின் கண்ணீரால் நனைத்து தொட்டவர்கள் வெகு சிலர்! யார் இவர்கள்..... தெய்வ சினேகத்தால் கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள்! இவர்கள்தான் இன்றும் நிலைத்திருக்கிறார்கள்! ஏனெனில், கண்ணீருடன் மனந்திரும்பி துயரப்பட்ட அவர்களை, ஓடிவந்து அணைத்து தேவன் ஆறுதல் செய்யும் சம்பவம்..... இன்றும் நாள்தோறும் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஈடேறிவருகிறது!
நாள்தோறும் “தேவனிடம் நெருங்கி வாருங்கள்.... அப்போது, தினசரி உங்கள் கைகள் சுத்தமாகும்.... இருதயம் பரிசுத்தமாகும்! அவ்வளவுதானா? இல்லை.... அவர் உங்களிடத்தில் நெருங்கிச் சேர்வார்!” (யாக்.4:8). “அவருடைய அணைக்கும் கரங்களே” நம்மை என்றென்றும் நிலைநிற்கச் செய்திடும் தேவ அன்பு!
ஆ, அதுவே அந்த பாக்கியம்!!
- ரத்னம்
