நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
06.06.2024
23. சத்தியம் முழங்கும் தாசர்களுக்கே, தீங்கு உண்டு!
இன்றைய சராசரி ஊழியம் “மனுஷர் உதவிக்கு” கரம் நீட்டிவிட்டு...... ஆவிக்குரிய ஊழியத்தில் ஒருவர் மனதும் புண்படாதபடி பார்த்துக்கொள்ளுகிறதே! நீயோ, தேவ ஊழியனே, ஒவ்வொரு உள்ளங்களையும் அதிரச் செய்வாயாக!...... ‘இன்றும்’ சிலரை ஆத்திரமான மூர்க்கம் அடைந்திடச் செய்வதற்கும் தயங்காதிருப்பாயாக!
இன்றைய பெரும்பாலான பிரசங்கிகள், திரள் கூட்டத்தை ‘மனம் நோகாமல்’ கரம் கோர்த்து முன் செல்கிறார்கள்! நீயோ, தேவ ஊழியனே, அந்த திரள்கூட்டத்தை சவாலிட எதிர்த்து முழங்குவாயாக! முழு சுயாதீனத்தோடு, தீக்கனலாய், தேவ ஆவியில் நிறைந்து.... தேசத்தின் பாவங்களை ‘பகிரங்கமாய்’ எதிர்த்து கண்டிக்கும் எந்த தேவ ஊழியனும் “தேச துரோகி” என்றுகூட முத்திரை குத்தப்படுவான்! அவனது நாவில், இருபுறமும் கருக்குள்ள வேத வசன பட்டயம் இருக்கிறபடியால் “அன்பற்றவன்...... அணைத்துப் போகத் தெரியாதவன்” என ஜனத்தின் எதிர் - அபிப்பிராயங்கள் அவன் மீது சுமரும்! அவர்களின் மனம் கோணாமல், அணைத்துப்போகும் ‘சராசரி பிரசங்கி’ வாழ்த்தப்படுவான்! சத்தியத்தை சத்தியமாய் பேசுபவன் துரத்தப்படுவான்!
- ரத்னம்