09.12.2021
|
12. மரியாளின் ‘தாழ்மை சிங்காரம்’ நமக்கும் உரித்தாகுக!
|
ஒரு சமயம், உலகிலேயே ஓர் அதி முக்கிய பணிக்கு தேவனுடைய கண்கள் இந்த பூமியை தீவிரமாய் தேடியபோது, “மரியாளிடம்” தேவன் எதிர்பார்த்த உண்மையான தாழ்மை அவளது உள்ளத்தில் நிறைவாய் இருந்ததை கண்டார்! எனவேதான் தன் ஒரேபேறான மைந்தன் இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுக்கும் பாக்கியத்திற்கு இந்த மரியாளே தகுதியுள்ளவள் என்பதை திடமாய் உறுதிசெய்தார். இந்த சமயத்தில் தேவனுக்கு துதிபாடிய மரியாள், “அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்” என பாடி மகிழ்ந்து பூரித்துப்போனாள்!! இந்த மரியாளைப் பாருங்கள்.... தான் பிரசவிக்க சத்திரத்தில் இடமில்லாமற்போனாலும், தான் பிரசவித்த சிசுவோடு மாட்டுத் தொழுவத்தின் வைக்கோல் புல்லின்மேல் படுக்க நேர்ந்தாலும், தனக்கு “ஏற்ற இடம்” கிடைத்தது என்றே அறிந்து நிறைவுற்றிருந்தாள். இதைவிட மேலானதொன்றிற்காய் ஏங்கி அங்கலாய்க்கவே இல்லை! இவ்வித தாழ்மையின் சிங்காரத்திற்குள் தேவன் தன்னை வைத்திட்டாரே என்றே தேவன்பால் நன்றியுடன் உள்ளம் உவந்தாள்!
இன்றோ, தாங்கள் தாழ்மையற்றவர்களாய் இருந்தும், தங்களைத் தாங்களே தாழ்மை உள்ளவர்களாக எண்ணிக் கொள்பவர்களே ஏராளமாய் உள்ளனர்! ஆனால், அவர்களின் பேச்சுக்களும், செய்கைகளும் அவர்களின் உண்மை லட்சணம் ‘தாழ்மையின் சிங்காரம்’ அல்ல என்பதை வெளிப்படுத்தி காண்பிக்கிறது!