நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

04.09.2025
36. இக்கட்டு நேரமே, ‘வல்லமை கர்த்தருடையது’ என்று பிரஸ்தாபிக்கும் நேரம்!

“வல்லமை என்றென்றும் கர்த்தருடையது!” என சமர்ப்பித்து, ஜெபிக்க இயேசு கற்றுக் கொடுத்தார்! (மத்தேயு 6:13). அவரே சர்வ வல்லவர்! ஆகிலும் நம் துன்ப நேரத்தில் “வல்லமை தேவனுக்கே உரியது!” என நாம் விசுவாச அறிக்கையிட்டு பிரசித்தப்படுத்தாத பட்சத்தில், அவரது வல்லமை நம் வாழ்விற்கு கிட்டிச் சேராது! என சங்கீதம் 68:34,35 - தெளிவாக கூறுகிறது. ‘தங்கள் பெலன் வெறுமை’ என்பதை அறிந்தவர்கள் மாத்திரமே ‘வல்லமை கர்த்தருடையது’ என அறிக்கை செய்திட முடியும்! தேவன் நம்மை ‘மண் அல்லது தூசி’ என நினைவுகூர்கிறார் (சங்.103:14) ..... ஆனால், நம்மை தூசி என ‘நாம்’ உணர்வதில்லையே! இக்கட்டு நேரத்தில், தன் சுய - பெலன், பண - பெலன், மனுஷீக - பெலன் என சார்ந்து வாழ்வதின் அறிக்கை என்னவென்றால் ‘எனக்கு தேவன் வல்லவரில்லை’ என்பதுதான்!
“தேவரீர், நீர் சிருஷ்டித்த மகத்துவங்களை நான் காணும்போது, நீர் மனுஷரை நினைப்பதற்கு அவன் எம்மாத்திரம்?” என நாமும் தாவீதைப்போல், நம் தலைநிமிர்ந்து அடிக்கடி வானத்தின் மகத்துவம் காண்பவர்களாய் இருந்திட வேண்டும்! தேவனின் மகத்துவம் கண்ட யோபு “என்னை தூசியில் வைத்து மனஸ்தாபப்படுகிறேன்” என தாழ்த்தினார் (யோபு 42:6). தேவ பிரசன்னத்தில் எரேமியா தாழ்த்தி தன் முகத்தை தூசியில் நுழுத்தினார்! (எரே.3:29). இவ்வாறு தங்களை உணர்ந்தவர்கள் மாத்திரமே, துயர நேரத்தில் யாதொரு சத்துவத்தையும் சாராமல் “வல்லமை கர்த்தருடையது!” என அவருக்கே முழு பிரஸ்தாபத்தையும் செலுத்துவார்கள்! கர்த்தரும் அவர்கள் வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்வார்! ‘அந்த சின்ன பென்யமீனுக்கு’ பெரிய மகத்துவம் கட்டளையிடுவார்! (சங்.68:27).
- ரத்னம்
