நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

05.02.2026 6வது வாரம்
‘சினேகம் நிறைந்தவனே’ கிறிஸ்தவன்!

“தேவனை நேசிப்பவன், தன் சகோதரனையும் நேசிக்கிறான்” என்ற சத்தியத்தை தன் இருதயத்தில் நிரந்தரமாய் பதித்துக் கொள்பவனே, கிறிஸ்தவன்! ஆகவே, இவன் தன்மீது எவ்வளவு கவனம் செலுத்துகிறானோ, அதே அளவு கவனத்தை தன் அயலானிடத்திலும் செலுத்துவான். ஆம், இவன் இருதயம் ஒவ்வொருவருக்காகவும் அன்பினால் நிறைந்து ததும்பியிருக்கும். “விசேஷ நண்பர்கள்” என்ற குறுகிய வட்டத்திற்குள் இவனுடைய அன்பு தேங்கிவிடாமல் எல்லா மனுஷரையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டோனாயும் இருப்பான். இவனை பகைப்பவர்கள் கூட, பதிலுக்கு ‘அன்பையே’ பெற்றுக் கொள்வார்கள்! தன்னை பகைத்து தூஷிப்பவர்களுக்கு நன்மை செய்திட தன்னிடம் திராணியில்லாத பட்சத்தில், அவர்களுக்காக அன்போடு ஜெபிப்பான். இவ்வாறாக, அவனுடைய இருதயம் எப்போதும் ஓர் சுத்த இருதயமாகவே திகழ்ந்திடும்! அவன் இருதயத்தில் பொறாமை, பகை, பழிவாங்குதல், பெருமை.... ஆகியவைகளுக்குப் பதிலாக, சாந்தமும் பொறுமையுமே எப்போதும் குடி கொண்டிருக்கும். அப்படியிருந்தும், இவன் தனக்குரிய பெலவீனத்தையோ நேர்மையாக மதிப்பிட்டு, தாழ்மையாய் இருப்பான்!
- ரத்னம்
