நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
இந்த பூமியிலேயே தங்களை நியாயந்தீர்த்துக் கொள்பவர்களுக்கு, நியாயத்தீர்ப்பு நாளில் உண்டாகும் ஆக்கினைத் தீர்ப்பு இல்லை என்பதே மகிழ்ச்சியான சுவிசேஷம்!! (1கொரி.11:31). ஆகிலும், இந்த பேரானந்த சுவிசேஷம் கூட இன்று “வேறொரு சுவிசேஷமாய்” (2கொரி.11:4) திரிக்கப்பட்டு, தேவ ஜனங்களை சாத்தான் வஞ்சனை செய்ய முற்பட்டிருப்பதை நம் கண்கூடாய் காண்பது துரதிருஷ்டமேயாகும்!
சாத்தானின் இந்த வஞ்சக வலையில் வீழ்ந்தவர்கள், இந்த உலகத்தாரைப் போலவே “தங்களைத் தாங்களே நிதானித்துக் கொண்டவர்களாய்” நியாயந்தீர்ப்பதற்கு தங்களிடம் யாதொரு குறையும் இல்லை! என கூறும் கொடிய நிலைக்குச் சென்று விட்டார்கள்! பெரும்பாலானவர்களுக்கு, 1கொரிந்தியர் 11:31-ம் வசனத்தின் அடுத்த வசனமாகிய “நாம் நியாயந்தீர்க்கப்படும்போது..... கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்” என்ற 32-ம் வசனம் தெரியவேயில்லை!
அதாவது “கர்த்தராலே தாங்கள் சிட்சிக்கப்பட்டு அவரால் நியாயந்தீர்க்கப்பட” தேவனுக்கு முன்பாக தங்களை நிறுத்திப் பார்த்திட தவறிவிடுகிறார்கள்!! (1கொரிந்தியர் 11:32).
பின் என்ன...... இனி, இவர்கள் அந்த ஆதாமைப்போலவே, தன் பிழையை உணர்வதற்குப் பதிலாய், தன் மனைவியின் மீதும், சர்ப்பமாகிய சாத்தான் மீதும் குற்றம் சாட்டி தேங்கி நின்றுவிடுகிறார்கள்!! எதுவரை இவ்வாறு நிற்பார்கள்? ....... முடிவில், கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக “உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும்வரை” நின்று கொண்டிருப்பார்கள்!! (1கொரி.11:32). ஆ, இது துயரம் அல்லவா?