நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
‘நல்ல காலத்தில்’ அத்திப்பழம், நிறைய பழுத்திருக்கும்! அந்த காலம் முடிந்ததும் கனிதராது! இதை இயேசுவும் அறிவார் (மாற்கு.11:13). ஆனால், வாழ்வின் நல்ல காலத்தில் விசுவாசம், மகிழ்ச்சி என வாழ்ந்து விட்டு, நல்ல காலமில்லாத துயர சூழ்நிலையில் அவிசுவாசமும், மகிழ்ச்சி இழந்த ஜீவியத்தை மாற்றவே இயேசு வந்தார்! நட்பின் நேரத்தில் அன்பும், விரோத நேரத்தில் அன்பற்ற தன்மையும் கொண்ட ‘மாறும் மானிட அன்பை’ அழித்திடவே வந்தார்! மாறாத தெய்வ அன்பே பிதாவின் பூரண சற்குணம் என்றார்! (மத்தேயு.5:45,48).
‘இந்த மானிட அன்பை’ தெய்வ அன்பென நம்பி, அதை ஒருவரும் ஒருக்காலும் உன்னிடத்தில் புசித்திடக் கூடாது என.... இஸ்ரவேலின் எல்லா அத்திமரங்களை அல்ல, அந்த ஒரு அத்திமரத்தை சபித்தார்! ‘அந்த அத்தி மரம்’ வேரோடே பட்டுப்போனது! (மாற்கு.11:14,20). ஆம், இந்த அழைப்பு ‘ஒவ்வொருவருக்கும்’ உரியது! “எக்காலத்திலும் உங்கள் கனி” நிலைத்திருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம் (யோவான்.15:16), துன்பகாலத்தில் ‘கனிதராத’ ‘அவரவர்’ மரம் சபிக்கப்பட வேண்டும்! மானிடம் ஒழிந்து, தெய்வீகம் மலர வேண்டும்! அப்போது மாத்திரமே, அவரது தெய்வ அன்பில் நாம் நிலைத் திருப்போம்! அவரது சந்தோஷத்தில் நிலைத்திருப்போம்! (யோவான்.15:9,11). விசுவாசத்தில் ஐக்கியத்தில் என்றும் நிலைத்திருப்போம்!