நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

07.08.2025
32. ‘துன்பத்தில்’ தேவனை தேடுவோரின் தாகம் தீர்ப்பார்!

ஆழத்தையே, ஆழம் கூப்பிடும்! யாதொரு கலங்கும்நேரம், கண்ணீர் சிந்தும் நெருக்கமான நேரம்.... ஆகிய நேரத்தில் என்னுடைய தேவை என்ன? என் கலக்கம் தீர, சூழ்நிலை மாற வேண்டுமா? அல்லது கண்ணீர் துடைக்கப்பட, மங்களம் பிறக்க வேண்டுமா? பக்தியுள்ளவனின் தேவை ‘வெளிப்புறமான’ அந்த ஆழமில்லாத ஆறுதல் அல்ல! அந்த தியங்கிடும் வேளையில், அவனது ‘ஆழமாகிய ஆத்துமா’ தன் ‘தேவனாகிய ஆழத்தையே’ தேடி கூப்பிடும்! ஏனோ, தானோவென்று அல்ல... பாலைவனத்தில் தண்ணீர் இல்லையென்றால், தாகத்தால் செத்துவிடும் நிலைகொண்ட மானைப்போலவே, “என் தேவன் எங்கே?” என அவனது ஆத்துமா வாஞ்சித்து கதறி கூப்பிடும்! (சங்.42:1,3,7). தன் தேவனை இப்படி கூப்பிட்டு தேடியவனுக்கு, அவர் வருவார்! மதகுகள் திறந்து விடும் “நீர்வீழ்ச்சியாய்” அலைபுரண்டு வருவதுபோல் அவனிடம் வருவார், தாகம் தீர்ப்பார்!!(வச.7). அவரது சமூகத்தில் தாகம் தீர்ந்த அவனுக்கு, அவரே இரட்சிப்பும் கீதமுமாய் மாறுவார்(வச.5,11). இன்றும், வருத்தமான யாதொரு சூழ்நிலையின் பாரம் கொண்ட தன்னுடைய உத்தம சீஷர்கள் ‘தன்னிடம் வருவார்கள்’ என இயேசு அறிவார்! அவர்களுக்காகவே, தன் இருகரம் விரித்து “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” என வரவேற்று தன்னிடம் சேர்த்துக் கொள்ளுகிறார். அவர்களின் ஆத்துமாவின் ஆழத்தில், இளைப்பாறுதலையும் கட்டளையிடுகிறார்! (மத்.11:28,29).
- ரத்னம்
