நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

27.08.2026 35வது வாரம்
‘ஆயக்கார மத்தேயுவின் தாழ்மையே’ அவரை, இயேசுவின் சீஷனாக்கியது!

12 சீஷர்களில் ஒருவனான மத்தேயுவின் தாழ்மையை நீங்கள் கண்டது உண்டா? மத்தேயு சுவிசேஷத்தை, மத்தேயுதான் எழுதினார். மத்தேயு தனது 10-ம் அதிகாரத்தில், இயேசு தேர்ந்தெடுத்த 12 சீஷர்களின் பட்டியலைக் குறிப்பிடும்பொழுது, ‘தன்னையும்’ அதில் குறிப்பிடுகிறார். தன்னை கூறும்பொழுது “ஆயக்காரனாகிய மத்தேயு!” என்றே குறிப்பிட்டார் (மத்தேயு.10:3). அந்நாட்களில் ‘ஆயக்காரர்கள்’ கேடான பாவிகளாய் கருதப்பட்டார்கள். ஒரு சமயம் இயேசு குறிப்பிடும்பொழுது “வேசிகளும் ஆயக்காரர்களும்” என குறிப்பிடாமல் “ஆயக்காரர்களும் வேசிகளும்கூட....” பரலோகத்திற்கு போக முடியும்..... என குறிப்பிட்டதை கவனியுங்கள். ஆம், வேசிகளை விட ஆயக்காரர்களே அன்று மோசமான இடத்தை பெற்றிருந்தார்கள். ஆகவே, மத்தேயு தன்னை சீஷர்களில் ஒருவராக குறிப்பிடுவதற்கு ‘ஆயக்காரனாகிய மத்தேயு’ என குறிப்பிட்டது தன்னை, தாழ்ந்த இடத்தில் வைத்துக் கொள்ள விரும்பிய அவரது தாழ்மையை மணம்வீசச் செய்கிறது!
தாழ்மையின் அழகும் அதன் நறுமணமும் சொல்லிமுடியாதது! இயேசுவே தாழ்மையின் உயர்ந்த மாதிரியாயிருக்கிறார். ஆகிலும், பழைய ஏற்பாட்டிலும், இயேசுவின் சீஷர்களிடத்திலும் பொதிந்திருக்கும் தாழ்மை, தாழ்மையின் அழகை இன்னும் அழகுபடுத்துவதாயிருக்கிறது!
- ரத்னம்
