நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

24.07.2025
30. உபதேசமாய் அல்ல “செய்து காண்பிக்கும்” மாதிரியை இயேசு கட்டளையிட்டார்!

இயேசு “செய்து காண்பித்த” (Demonstration) மாதிரி என்பது விசேஷமானதாகும்! (யோவான்13:14,15). தாழ்மையை விளக்கி போதிப்பது எளிது! ஆனால், செய்தும்! வாழ்ந்தும்! காண்பிப்பதே பிறரை வழிநடத்தும் பாதையாய் இயேசு கூறினார்! “சீஷர்களின் கால்களை இயேசு கழுவி” செய்து காண்பித்தது அவ்வித உணர்த்துதலேயாகும்! “தாழ்மையை” விளக்கி கூறினாலும், ஒருவன் தாழ்மை கொண்டவனாய் இராமலே விளக்கிக் கூற முடியும்! மாறாக, “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்தார்” என்பதிலேயே அவர் “செய்து காண்பித்த தாழ்மை” விளங்குகிறது! (பிலிப்பியர்2:7,8). காலமெல்லாம் “அடிமை” ஊழியத்தில் வாழ்ந்து, தேவனிடத்திற்குப் போகும் போதும் அடிமையாகவே சென்றிடவிரும்பி, ஒரு சீலையை அரையில் கட்டிக்கொண்டு சீஷர்களின் கால்களை இயேசு கழுவினார் என யோவான் 13:3-5 வசனங்கள் நமக்கு கூறுவது, ஓர் மாதிரியின் ஜீவியம்!
அவர் முதலாவதாய் சென்று, பந்தி மேஜையில் ஒருபோதும் அமராமல், கடைசிவரை பந்தி பரிமாறும் பணிவிடைக்காரராகவே இருந்தார்! சீஷர்களோடு கடைசி இராப்போஜனத்தில் “அவரே அப்பத்தை பிட்டு, பரிமாறினார்”(1கொரி.11:24). அவர் உயிர்த்தெழுந்த பிறகும், தன் சீஷர்களுக்கு ‘பணிவிடைக்காரராகவே’ அப்பத்தையும் மீனையும் அவர்களுக்கு பரிமாறினார் (யோவான் 21:13). ஆ, ‘இவ்வாறு நடைமுறைப்படுத்தி’ வாழ்ந்த அடிமையின் ரூபமே ஆனந்தம்! இதுவே மெய்யான தாழ்மை!
- ரத்னம்
