நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

09.04.2026 15வது வாரம்
‘பன்றி’ சேற்றைக் கழுவினால் போதும் என்ற நிலையே சபையின் வீழ்ச்சி!

வெறும் பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு, இன்னமும் இரட்சிக்கப்படாத கிறிஸ்தவன் சபையிலிருப்பது பேராபத்தானது! இவன் மீண்டும் மீண்டும் பாவம் செய்துவிட்டு பாவ சங்கீர்த்தனமோ, அல்லது “நான் அறிந்து செய்த பாவத்தையும் மன்னியும்!” என்ற துணிகரமான பாவ அறிக்கையோ செய்து கொண்டு, தொடர்ந்து துன்மார்க்கனாகவே சபையிலிருப்பான்! இவர்கள், விபச்சாரத்தை தின்றுவிட்டு “வாயைத் துடைத்தால் போதும்” என மகிழ்வார்கள்! (நீதி.30:20). இவர்கள், எத்தனை துன்மார்க்கமும் செய்யலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் சேற்றில் புரளலாம்.... “பன்றி கழுவப்பட்டால் போதும்” என துணிகரம் கொண்டவர்கள்! (2பேதுரு.2:20). யார் இவர்கள்? “தங்கள் வஞ்சனைகளில் (பாவ மன்னிப்பின் திருப்தியில்) உல்லாசம் கொண்டு சபையில் இருப்பவர்கள்.... விபச்சாரத்திற்கும், பொருளாசைக்கும் பழகிப்போன (மாறாத) இருதயம் கொண்டவர்கள்.... தாங்களும் பாவத்திற்கு அடிமையாயிருந்து கொண்டு, தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு, தாங்கள் விரும்பியதை தாராளமாய் செய்திட “சுயாதீனம்” தந்தவர்கள்! (2பேதுரு 2:13,14,19).
தேவன் தந்த இந்த எச்சரிப்பை ஏற்று நடந்தால் மாத்திரமே, சபை ‘பரிசுத்தத்திலும் மெய் ஐக்கியத்திலும்’ பிழைத்திருக்க முடியும்! இல்லையேல், துன்மார்க்க அழிவில் பங்கடையும்!
- ரத்னம்
