நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
09.11.2023 |
19. இயேசுவின் ‘வாய் மொழி’ எப்போதும் மதுரமாயிருக்கும்! |
இயேசுவின் அங்கத்தைக் குறித்து பரிசுத்தாவியானவர் வியந்து குறிப்பிட்டது அவருடைய “வாய்” மட்டுமே! கனி நல்லதென்றால் மரமும் நல்லதுதானே!! ஏசாயா 53-ம் அதிகாரம் முழுவதும் இயேசுவின் பாடுகளைக் குறித்தே எழுதியிருக்கிறது. அதில், “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார்...... ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை” (வச.7). “அவர் தம்முடைய வாயை திறவாதிருந்தார்” (வச.7) “அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை” (வச.9) என மூன்று தடவை அவர் “வாயை” வியந்து எழுதியிருப்பதைப் பாருங்கள்.
தன் பாடுகளின் நேரத்தில் அவர் வாய் திறந்தபோதெல்லாம் “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்றேதான் கூறினார். தன்னையும், தன் சொந்த வாழ்வையும் பொருத்தவரையில் “பிறரை மன்னிப்பதும், ஆசீர்வதிப்பதுமே” அவர் வாயிலிருந்து புறப்பட்டுவந்தது. “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும்....” இருந்ததைக் குறிப்பிட்டே “அவர் பாவம் செய்யவில்லை! அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை” என பேதுரு வியந்து எழுதினார் (1பேதுரு 2:22,23).