நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
04.02.2021 | 2. தெய்வ அன்பில் சேதம் இருப்பதில்லை! |
ஆம், திறந்து வைக்கப்பட்ட ஒரு அறையில், சூரியஒளி எவ்வாறு பாய்ந்து நிரப்புகிறதோ அதேபோலவே நம்முடைய இருதயத்தை தம்முடைய அன்பினால் நிறைத்து விடுவதற்கு தேவன் மகாவிருப்பம் கொண்டுள்ளார். நாம் சுவாசிக்கும் காற்று நம்மைச் சுற்றிலும் சூழ்ந்து நெருக்கி இருப்பதைப் போலவே, தன்னை சுவாசிக்க விரும்புவோருக்கு ‘தேவ அன்பு’ அவர்களைச் சூழ்ந்து நெருக்கி நிற்கிறது! அந்த அன்பு உள்ளே பிரவேசிக்க முடியாமல் அரை - குறையாய் கதவை திறந்து தடை செய்யாதிருங்கள்! நீங்கள் மாத்திரம் தடைகளை அகற்றி, முழு இருதய கதவையும் திறந்துவிட்டால், தேவ அன்பின் வெள்ளம் உங்கள் உள்ளம் புளகாங்கிதம் அடையும்படியாய் நிறைத்துவிடுவதைக் காண்பீர்கள்!!
நம்மை கிறிஸ்துவுக்குள் ஊன்றக் கட்டுவதற்கு தெய்வீக அன்பைக் காட்டிலும் வலிமையான வல்லமை வேறு எதுவுமே இல்லை எனலாம். இந்த இரகசியத்தை சாத்தான் அறிந்திருக்கிறபடியால்தான், ‘அன்பில் சேதம் உண்டாகும்படி’ நம்மைத் தாக்கி, வெறும் “சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும்”குறுகித் தேய்ந்துவிடும் நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கிறான் (1கொரி.13:1).