நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

05.11.2026 45வது வாரம்
“திடகாத்திரத்தைவிட உபவாசமே என் பெலன்”

டேராடூன் வந்து சேர்ந்த சாது சுந்தர்சிங், ஊழிய பயணத்தால் மிகவும் களைப்புடன் அங்கிருந்த ரிஷிகேஷ் ஊருக்கும் சென்று கர்த்தருடைய ஊழிய பணிகளை நிறைவேற்றினார். பின்பு, அனுபீல்டு என்ற கிராமத்திற்கு பயணம் செய்த அவர், ஏராளமான ஜனங்கள் அவருக்காக காத்திருந்ததைக் கண்டு ‘களைப்பு நீங்கி’ நிறைவான புத்துணர்வு பெற்றார். இவை அனைத்தும், தன் பெலவீனத்தைப் போக்கிட தேவன் அருளித்தந்த ‘புதுபெலன்’ என்பதை சாதுசுந்தர்சிங் உணர்ந்தார்.
அனுபீல்டு ஊழியம் முடித்து அங்குள்ள தரம்ஜித் என்ற ஊழியரின் அறையில் 10-நாள் உபவாசத்தில் இருந்தார் சுந்தர் சிங். ஒரு நாளில் 1-டம்ளர் பால் மாத்திரமே குடித்தார். அந்த உபவாச நாளில் சுந்தர்சிங் பெலவீனமாயிருந்தாரே ஒழிய வியாதிப்படவில்லை. அங்கிருந்து, மிகுந்த உற்சாகத்துடன் தன் ஊழிய பயணத்தைத் தொடர்ந்தார்! அவர் கூறும்போது ‘உபவாச பெலனே’ என் சரீர பெலனைவிட, என் உற்சாக ஊழிய பணிக்கு துணையாயிருந்ததைக் கண்டேன்! ஆகவேதான், மிகுந்த அவசியமிருந்தால் மாத்திரமே பகலில் வெகு சிறிது நேரம் இளைப்பாறுவேன் அல்லாமல், கர்த்தர் அருளிய பெலன் என்னை ஊழியத்தில் முன்னோக்கிச் சென்றிட என்னை வல்லமையாய் பெலப்படுத்தியது, என்றார்!
- ரத்னம்
