நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
06.05.2021 | 5. ‘ஜெபத்தின் வலிமை’ சபைகளில் பெருக வேண்டும்! |
பெரும்பாலான சபைகளில் ‘அன்றுபோல் இன்று’ ‘ஜெபம்’ இல்லை என்பதை பகிரங்கமாய் கூறலாம்! ஒரு சபையில் நடக்கும் கூட்டங்களில் ‘ஜெபக்கூட்டமே’ வலிமையான கூட்டமாக இருந்திட வேண்டும்! ஆகிலும் பெயரளவில் நடக்கும் ஜெபக்கூட்டங்கள் சில சபைகளில் காணப்பட்டாலும், அது பெலவீனமான ஜெபக்கூட்டமாகவே நடத்தப்படுவது, வருத்தமிகு விஷயம்! ஆதிநாட்களில், வாரத்தில் ஒருமுறை நடத்தும் ஜெபக்கூட்டம் கூட, இன்றைய சபைகளில் மறைந்து விட்டது! எந்த வலிமையான ஊழியமும், ஸ்தல சபையின் ஜெப வாழ்க்கையை மையம் கொண்டதாகவே இருக்கிறது!
நம்முடைய சபையின் ஜெபங்கள், சுய நல நோக்கத்திற்காகவோ தங்களின் ஸ்தாபன வளர்ச்சிக்காகவோ மாத்திரமே இருப்பது ஒழிய வேண்டும். அதற்குப் பதிலாக, தேவன் ஒருவரையே நமது இலக்காக வைத்து ஜெபிக்க வேண்டும். தேவனுடைய கனத்திற்கு ஏற்பட்ட இகழ்ச்சி! குமாரனாகிய இயேசுவையும் அவரது பிரமாணங்களையும் புறக்கணிக்கும் சோகம்! அவருடைய நாமத்திற்கு ஏற்பட்ட இழுக்கு! அவருடைய வேதம் மூன்றாம் ஸ்தானத்திற்கு புறக்கணிக்கப்பட்ட அவலம்! சபைகள்‘களியாட்டு கூடாரமாகவும்’ சமூக உறவுக்காக கூடும் கூட்டமாகவும் மாறியது துயரமன்றோ! இவ்வாறெல்லாம், கர்த்தருடைய சபைகளின் வீழ்ச்சிகளுக்கு மனபாரம் கொண்டு ஜெபிக்கும் சபைகள் ‘அங்கொன்றும் இங்கொன்றுமாக’ எழும்புவார்களாக!