நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
26.12.2024
52. வாழும் சீஷனா? ‘பெயரளவு’ கிறிஸ்தவனா?
கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவர்கள், சபைகளில் எக்காலமும் இருந்தே வருகிறார்கள். தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட போதிலும், தேவ பார்வையில் அவர்கள் கிறிஸ்து அல்லாதவர்களே! கிறிஸ்து மார்க்கத்துக்குரிய ஆராதனைகள், சபையின் வருடாந்திர கூட்டங்கள், சபை போற்றும் உபதேசங்கள், மற்றும் ஆசாரங்களை அவர்கள் அனுசரித்த போதிலும் கிறிஸ்துவுக்கு அவர்கள் ஜீவியத்தில் இடமில்லாததால், அவர்களின் ரட்சிப்பைத் தொடர்ந்து, எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அவர்கள் பேச்சு, செய்கை, நடக்கையை வைத்து மாத்திரமே, அவர்கள் கிறிஸ்துவை உடையவர்களோ, கிறிஸ்தற்றவர்களோ என்பதை அறியலாம். உலகிலுள்ள மார்க்கங்களில், கிறிஸ்து மார்க்கமும் ஒன்று என உலக பக்தன் கூறினாலும், இது தேவ மார்க்கம், இது ரட்சிப்பின் மார்க்கம் என்பதை அவர்கள் அறியவில்லை. கிறிஸ்தவர்கள் என்னும் பெயர் கிறிஸ்துவால் கொடுக்கப்பட்டதல்ல! அவர் ஒரு மார்க்கத்தை உண்டாக்கும்படி வந்தவரல்ல. கிறிஸ்துதான் கிறிஸ்து மார்க்கம்!! தெய்வ மகிமைக்கு ஒரேவழி அவர்தான்!
சீஷர்கள் என்பதுதான் தன்னை பின்பற்றி வாழ்ந்த அடியாருக்கு ஆண்டவர் கொடுத்த பெயர். ‘கலப்பையில்’ கை வைப்பதே சீஷத்துவம்! குருவைப்போல் பலன் தந்திட ‘கலப்பையை விட்டுவிட்டு’ திரும்பிப்பாராதவன்! சுவிசேஷத்திலும், நடபடிப் புஸ்தகத்திலும் சீஷர்கள் என்னும் சொல் ஏராளமாய் வருகிறது. கிறிஸ்தவர்கள் என்னும் சொல்லோ மூன்று இடங்களில் மாத்திரம் வருகிறது. சீஷனின் வாழ்க்கையில்லாமல், கிறிஸ்தவம் இல்லை, கவனம்!
- ரத்னம்