நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

10.09.2026 37வது வாரம்
‘கெட்ட புத்தக வாசிப்பிலிருந்து’ விடுதலை தந்த தேவன்!

என் பின்மாற்ற நிலையில், கதை புத்தகங்களின் கவர்ச்சியும் என்னைப் பிடித்து இழுத்தது. முழு புத்தகத்தையும் படித்து முடிக்கும் வரை, அவ்வித புத்தகத்தை நான் மூடுவதில்லை. சிலசமயம், புத்தகத்தை படித்து முடிக்கும் போது காலை விடிந்துவிடும்! புத்தகத்தின் மோகத்தால் தூக்கம் இழந்து, சரீர பெலவீனமும் அடைந்தேன். இன்றுள்ள பாலிய மற்றும் தீய புத்தகங்கள், வாலிபர்களை வெகுவாய் சீரழிக்கிறது. குறிப்பாய் வாலிபத்திற்குரிய ‘அருமையான நேரங்கள்’ வீண்விரையமாவது கொடுமையல்லவா? என் பெற்றோர்களோ, நான் என்ன புத்தகம் வாசிக்கிறேன் என்பதை கரிசனையாய் விசாரிக்காமலே, “புத்தகம் வாசிக்கும் பழக்கம் நல்லதுதான்” எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார்கள்.
கெட்ட புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை பெற நான் முயற்சித்தேன்! எவ்வளவு முயற்சித்தும் என்னால் முடியவில்லை. தேவனிடத்தில் என்னை நடத்துவதற்கு யாதொருவர் என்னிடத்தில் வரமாட்டார்களா? என தவித்தேன். தேவன் மிகுந்த அன்பும் கரிசனையும் உள்ளவர். என் கதறலைக் கேட்டு, என் மீட்புக்குரிய தேவையை என் தந்தை மூலமே அனுப்பி வைத்தார். தேவனைக் குறித்து என் தந்தை என்னிடம் பேசத் துவங்கியதும் சொல்லிமுடியா மகிழ்ச்சியடைந்தேன்! ஒரு உறுதியான தீர்மானத்தோடு, நான் இழந்த இயேசுவின் பாதத்திற்கு ‘பாவியாகவே ஓடிச்சென்று’ சரணடைந்தேன்!
- ரத்னம்
