நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

03.09.2026 36வது வாரம்
‘முக்கியமில்லாத ஸ்தானத்தை’ தெரிந்துகொண்ட இயேசு!

“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” எனக் கூறும் இந்த வசனத்தை, ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு “முக்கியத்துவம் இல்லாத இடத்தை தெரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்!” என்றே கூறுகிறது! இந்த பூமிக்கு வந்த இயேசுகிறிஸ்து ‘முக்கியத்துவம் இல்லாத’ ஸ்தானத்தையே எப்போதும் தழுவிக் கொண்டார். மாட்டு கொட்டிலில் பிறந்த அவரது பிறப்பு முக்கியத்துவம் அற்றது! ஒரு தச்சனாய் அவர் பணியாற்றியது முக்கியத்துவம் அற்றது! நாகரீகம் இல்லாத நாசரேத்தில் வாழ்ந்தது முக்கியத்துவம் அற்றது! கானாவூர் கலியாணத்தில் வேலைக்காரர்களோடு அமர்ந்தது முக்கியத்துவம் அற்றது! கல்வாரியில் கள்வர்களில் ஒருவராக மரித்தது முக்கியத்துவம் அற்றது! இவ்விதமாய் இயேசுவின் ஜீவியம் முழுவதும் முக்கியத்துவமற்ற ஸ்தானத்திலே தான் இருந்தது.
அவரது ஜீவியத்தின் கடைசி நாளில், சீஷர்களோடிருந்த இயேசுவை வைத்து இரண்டு வரிசை ஏற்படுத்தினால், ஒரு வரிசையில் 12 சீஷர்களும், மற்றொரு வரிசையில் இயேசு மாத்திரமே இருந்தார்! முதல் வரிசையிலிருந்த 12 சீஷர்களும் ‘தங்களில் யார் பெரியவன்?’ என்ற எதிர்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த வரிசையில் நின்ற இயேசுவோ, தண்ணீர் பாத்திரத்தை ஏந்தி சீஷர்களின் கால்களைக் கழுவி, ஒரு துணியினால் பாதங்களை துடைத்தார்! ஆம், முக்கியமில்லாத அடிமையின் ஸ்தானத்தையே இயேசு இறுதிவரை தெரிந்து கொண்டார்!
- ரத்னம்
