நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

14.08.2025
33. ‘அழைக்கப்பட்ட’ தேவமனிதர்கள் அவருக்கு வேண்டும்!

“வேறு யாரையாகிலும் அனுப்பும்!” என்றே தயங்கினான் மோசே! “நான் திக்குவாயன், மந்த நாவு கொண்டவன்” என மருகிப் பின் வாங்கினான்! சர்வ வல்ல தேவனோ, கோபம் கொண்டார்... “நன்றாய் பேசுகிறவர்களை நான் அறிவேன், ஆகிலும் எனக்கு, நீதான் வேண்டும்!” என்றே கட்டளையிட்டு, அந்த வனாந்திரத்தில் அழைத்தார்!! (யாத்.4:1-14).
“தேவனுக்கு மனிதர்கள் வேண்டும்!”என்பதா தேவனின் பாரம்? இல்லை! “தேவமனிதர்கள் வேண்டும்!” என்பதே அவரது பேராவல்! பிரசங்கிப்போர் ஏராளம்! வேதகலா வித்தகர்களும் ஏராளம்! பூமியெங்கும் உலாவும் அவரது கண்களில் ‘ஒருவனை’ அவர் தேடுகிறார். எங்கே அந்த தேவமனிதன்? இன்றைய கிறிஸ்தவ உலகில், கனவீன பாத்திரங்கள் ஏராளம்.... அது அல்ல அவர் தேடும் மனிதன்! அவன் ‘கனத்திற்குரியப் பாத்திரமாய்!’ எவ்வித தனது நற்செயலுக்கும் எஜமானே எடுத்து பயன்படுத்தும், கனத்திற்குரிய பாத்திரம்! அன்றும், இன்றும், கனத்திற்குரிய பாத்திரமே அவரது தேவை!
தனது ராஜரீக ஊழியத்திற்கு ‘அழைப்பு கொண்டவனையே’ தேவன் கோதுமை மணியாய் தெரிந்தெடுத்து.... அவனை ‘உடைத்து’ நொறுக்குகிறார்! மோசேயைப் போன்ற வானாந்திர ஜீவியமோ, யோசேப்பை போன்ற அடிமையின் சிறைவாழ்க்கையோ, இயேசுவைப்போன்ற தச்சுக்கூடமோ அல்லது அவரது சொந்த வீட்டாரின் பகையோ, நண்பனின் துரோகமோ.... அனைத்து சூழ்நிலையும் ஒன்றன்பின் ஒன்றாய் அனுப்பி, அவனை தேவன் நொறுக்குகிறார்! (ஏசாயா53:10). அழிப்பதற்கு அல்ல... அவனை ஆசீர்வதித்து, தேவனுடைய ஜனத்திற்கு ஜீவன் தருவதற்கு.... மிகுந்த பலனை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு! (யோவான்12:24). சர்வ வல்ல தேவனால் அழைக்கப்பட்டு, அவரது ஊழியனாய் இருப்பது சொல்லொண்ணா பாக்கியம். ஆகிலும், தேவ மனிதனுக்குரிய விலைக்கிரயம் செலுத்த துணிவு நெஞ்சம் கொண்டவர்கள் இல்லாத படியால் “தேவனால் அழைக்கப்படுகிறவர்களும்” சொற்பமாகிப்போனார்கள்!
- ரத்னம்
