நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

18.12.2025
51. ஆவிக்குரிய முன்னேற்றத்தை, பின் இழுக்கும் சக்திக்கு விலகுங்கள்!

மெய்யான ஆவிக்குரிய நிலையில் தங்கியிருந்து ‘மாயமும்’ ‘பிழையுமான’ மதவாத வஞ்சகங்களுக்கு நாம் விலகியிருப்பதற்கு, நாம் எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க வேண்டியது இக்காலத்தில் மிகவும் அவசியமாகிறது. நீங்கள் கேட்கும் புது உபதேசம் அல்லது மார்க்க சம்பந்த புதிய பழக்கம் அல்லது கேள்விப்படும் நூதனமான ஆவிக்குரிய அனுபவம்.... ஆகிய இவைகள், நான் தேவனோடு கொண்ட என்னுடைய நல்ல உறவிற்கு இடையூறு செய்கிறதா? கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய பரிசுத்த வேதவாக்கியங்கள் மீதும் நான் கொண்டிருந்த பக்தியான உறவை பாதித்துவிட்டதா? ‘என் சுயத்தை’ வெறுத்து வாழும் ஜீவியத்தை பின்வாங்கச் செய்கிறதா? நான் மற்ற கிறிஸ்தவர்களோடு கொண்டிருந்த நல்ல ஐக்கியத்தை பாதித்துள்ளதா? இந்த உலகத்தையும், அதில் உண்டான பாவங்களையும் புறக்கணித்து வாழ்ந்த என் உறுதியான நிலையை மாற்ற முயல்கிறதா? இந்த கேள்விகளை நாம் முன்வைத்து பெற்றிடும் விடைகளே, ஆவிக்குரிய நிலையில்லாமல், வெறும் மார்க்கவசமான யாவற்றையும் “போலியான மதவாதம்” என நாம் புறக்கணித்து தள்ளிவிட முடியும்!
- ரத்னம்
