நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
09.01.2025
02. ‘மேய்ப்பனில்லாத’ ஆடுகளின் நிலைமை!
இன்று சபைகளில் இருக்கிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்? “கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல” என வேதம் குறிப்பிடுகிறதே! பின்னே, அவன் யாருடையவன்? ஆம், அங்கு உட்கார்ந்திருக்கும் கிறிஸ்தற்ற மனுஷர், தங்கள் ஜென்ம சுபாவத்தைக் காண்பிப்பார்களே அன்றி, தெய்வீக பண்புடன் நடக்க மாட்டார்கள்! நடக்கவும் தெரியாது. சபையில் காணப்படும் சகல குழப்பங்களுக்கும், விரோதங்களுக்கும் ஜீவிய மாறுதல் இல்லாத இவர்களே, காரணமாயிருக்கிறார்கள்.
சபையார், ஆண்டவருக்கு உகந்தவர்களாய் நடந்து கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு உத்திரவாதமோ, அதே போன்ற உத்திரவாதம் சபையின் போதகருக்கும் உண்டு! தன் ஆண்டவருக்கு உத்தம ஊழியம் செய்திட, இவர்கள் அயராது பாடுபடுவர்கள் என்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார்! ஆனால், இன்றோ அனேக ஊழியங்கள் அப்படியில்லையே!
கிறிஸ்தற்ற சபையார் நடுவில், ஒரு நல்ல போதகர் ஊழியம் செய்வாரானால், அவருடைய ஆத்தும பாரத்திற்கும், கவலைக்கும் அளவே இராது! அதுபோலவே, தேவ பக்தியில் வாஞ்சை கொண்ட ஓர் சபை மக்கள் மத்தியில், சத்தியத்தில் நிலை நிற்காத ஆத்தும பொறுப்பற்ற போதகர் ஒருவர் இருப்பாரானால், சபையார் சஞ்சலப்படாதிருக்க மாட்டார்கள்! அவர்களின் சஞ்சலம், மேய்ப்பனில்லாத ஆடுகளின் துயரமான சஞ்சலமேயாகும்!
- ரத்னம்