நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

26.03.2026 13வது வாரம்
‘தேவன் சுத்திகரிக்கும் சபையே’ மேன்மையான சபை!

தேவன் பரிசுத்தப்படுத்தி வரும் ஒரு சபையை ‘அசுத்தம்’ எனக் கூறிட பயந்திருப்போமாக! பரிசுத்தவான்கள் கூடும் சபைகளில், சிலராய் எழும்பும் கெட்ட மாதிரிகள் அவ்வப்போது தோன்றுவதால், அந்த தூய சபையை குறைந்த மதிப்பீடு வைத்து பார்ப்பது, உகந்த செயல் அல்ல.
ஓ, அந்த சபையா..... அங்கு இருப்பவர்களில் சிலர், கெட்ட மாதிரி கொண்டவர்கள்! எனக் கூறுவதை ஜனங்கள் சகஜமாக்கிக் கொண்டார்கள். ஆனால் ஓர் உண்மை கேளுங்கள், மாய்மாலக்காரர்கள் உத்தம சபைகளிலும் இருப்பார்கள்! அவர்களின் நடத்தைகள் ‘விசுவாசத்திற்கு ஏற்படும் துரோகமாயும், சபைக்கு இடையூறாயும் இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை! இன்னும் அதிகமாய், ‘மற்றவர்களின் உத்தமத்தையும், சபைக்கு விரோதமாய் இருப்பவர்களின் நடத்தை, மட்டுப்படுத்தும்’ என்பதையும் நாம் கண்கூடாக காண்கிறோம்!
ஆனால் “ஒரு கெட்ட மாதிரியான யூதாஸினிமித்தம்” மீதமுள்ள 11 அப்போஸ்தலர்கள் தரம் இழந்தார்களா? சில ஆயிரம் பேர்கள் கொண்ட பேதுருவின் சபையில் “ஒரு அனனியா, சப்பீராள் தம்பதியினரால்” சபையின் தரம் குறைந்ததாக கணக்கிடப்படுமோ? அல்லது உலக சினேகம் கொண்ட “ஒரு தேமாவினிமித்தம்” பவுலின் ஊழியங்களை மாசு கற்பிக்கலாகுமோ? நிச்சயமாய் இல்லை! இவ்வாறெல்லாம் ‘தெளிந்த சிந்தை’ கொண்டவர்களே, கிறிஸ்து வரும் வரை உத்தம சபைக்குத் தூணாய் இருப்பார்கள்! ஆமென்.
- ரத்னம்
