நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

22.01.2026
யார் அந்த உத்தம சீஷன்!

இயேசுவின் சீஷன், தேவனோடு வைத்திருக்கும் உறவாடும் ஐக்கியத்தை எந்த ஒரு அலுவலோ அல்லது உரையாடும் நேரமோ, ஓய்ந்திருக்கும் நேரமோ அல்லது வேறு எதுவுமோ முறித்திட அனுமதிக்க மாட்டான். ஆம் அவன் தேவனோடு இடைவிடாமல் நடந்து சஞ்சரிப்பான்!
ஒன்றை கர்த்தர் கொடுத்தாலோ, அல்லது ஒன்றை அவர் எடுத்துக் கொண்டாலோ, எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செய்வான். தன் அனுதின ஜீவியத்தில், “தன்னுடைய கொஞ்சத்திலும் போதுமென்ற பொன்னான மனதுடையவனாய்” இருப்பான். இதுபோன்ற சீஷன், “சகலமும்” தன் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது! என்ற சத்தியத்தை ஆழமாய் விசுவாசிப்பான். மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ; நோய்வாய்பட்டிருப்பதோ அல்லது சுகித்திருப்பதோ; ஜீவனோ அல்லது மரணமோ.... ஆகிய எதுவாயிருந்தாலும் அவை யாவற்றிற்கும் அவன் தன் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லிக் கொண்டிருப்பான். தன்னை சந்திக்கும் எல்லாப் பாரங்களையும், கவலைகளையும் அவன் மிகுந்த கவனமாய் தேவனிடம் வைத்துவிடுவதால் ‘அதிர்ச்சியால்’ ஸ்தம்பிக்கச் செய்யும் எந்தப் பயத்தையும், பதட்டத்தையும் அவன் ருசிப்பதேயில்லை! இந்த உத்தம சீஷன், தான் ஜெபிப்பதை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தவேமாட்டான். இயற்கையான அவனது சொந்த சுபாவமாகவே ஜெபம் அவனுக்கு இருக்கும். ஆகையினால் அவன் எதற்குமே சோர்ந்து போவதில்லை!
- ரத்னம்
