நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

15.01.2026
3. வேத பண்டிதமா? பரிசுத்தாவியின் ஜீவியமா?

சகோதரரே! நமக்குள் வேதத்தில் நிபுணர் என கூறப்படுகிறவர்கள் அனேகர் உண்டு! வேதாகம கல்லூரியில் தேறி, அநேக வெகுமானங்களைப் பெற்றவர்கள் உண்டு! நம்முடைய வேத அறிவுக்குத்தக்கபடி ஜீவிக்கிறோமா? எவ்வளவு மீறுதல்கள்! எவ்வளவு பாவங்கள்! தேவனுக்கு முன்பாக அதிக வெட்கத்தோடு அறிக்கை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோமே.
இயற்கை அறிவுக்கும், ஆவியானவராலுண்டாகும் அறிவுக்கும் வித்தியாசம் இதுதான்.... பரிசுத்த ஆவியினால் நாம் போதிக்கப்படும்பொழுது தேவனுடைய இரகசியங்களை நாம் அறிந்துகொள்ளுகிறதுமாத்திரமல்ல, அறிந்து கொண்ட சத்தியங்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களாயும் இருப்போம். பரிசுத்த ஆவியின் போதனையும் பரிசுத்த ஜீவியமும் சேர்ந்தே வளரும். நம்முடைய ஜீவியத்தில் மாறுதலையுண்டாக்காத வேத அறிவு, பரிசுத்தாவியினால் உண்டானதல்ல! மேலும், அநேக வருஷமாய் வேதத்தில் அப்பியாசமுள்ளவர்களுங்கூட, பிரமிக்கத்தக்கவிதமாய் சொற்பகாலம் ஆவியானவரால் போதிக்கப்பட்டவர்கள் தேவனுடைய இரகசியங்களை எடுத்துக்கூறும் திறமையுடையவர்களாயிருக்கிறார்கள் என்பதை அறிந்து ‘பரிசுத்தாவி’ நிறைவினால் வாழ்ந்திடக்கடவோம்! ஊழியம் செய்திடக்கடவோம்!
- ரத்னம்
